சுவிட்சர்லாந்தில் புதிய அணுமின் நிலையங்களை அமைப்பதற்கு அந்நாட்டு மக்களில் சுமார் 60 சதவீதமானோர் ஆதரவு தெரிவித்துள்ளதாக புதிய கருத்துக்கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
சுவிஸ் மின்சார நிறுவனங்களின் கூட்டமைப்பு (AES) மேற்கொண்ட இந்த ஆய்வு, நாட்டில் நிலவும் மின்சாரப் பற்றாக்குறை குறித்த மக்களின் அச்சத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
சுவிஸ் நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை நாட்டின் எதிர்கால எரிசக்தி கொள்கை குறித்த முக்கிய விவாதத்தை இன்று நடத்தவுள்ள பின்னணியில் இத்தரவுகள் வெளியாகியுள்ளன.
‘gfs.bern’ என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய இக்கருத்துக்கணிப்பில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
79% மக்கள் தற்போதுள்ள அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை அவற்றின் செயல்பாட்டைத் தொடர வேண்டும் என விரும்புகின்றனர்.
59% மக்கள் புதிய தலைமுறை அணுமின் நிலையங்களை உருவாக்குவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
“2026 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் முதன்மைப் பிரச்சினையாக எரிசக்தி பாதுகாப்பே உள்ளது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மட்டுமே நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதா என்ற கேள்வி எழுந்துள்ளதால், மக்கள் அணுசக்தி போன்ற மாற்று வழிகளை நோக்கி நகர்கின்றனர்” என அரசியல் ஆய்வாளர் உர்ஸ் பியரி தெரிவித்துள்ளார்.
எனினும், ஒட்டுமொத்தமாக மக்கள் இன்னும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கே முதலிடம் தருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளாக அரசாங்கமும் மின் நிறுவனங்களும் விடுத்து வரும் எச்சரிக்கைகளும், உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்களுமே இந்த அச்சத்திற்குக் காரணமாகும். குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணைப்பு மூடப்பட்டுள்ள தற்போதைய சூழல், சுவிஸ் மக்களின் எரிசக்தி கவலைகளை மீண்டும் அதிகரித்துள்ளதாக எரிசக்தி துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனை எதிர்கொள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மேம்படுத்துதல், மின்சாரத்தைச் சேமிக்கும் தொழில்நுட்பங்களை உருவாக்குதல் மற்றும் புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான வழிமுறைகளை எளிதாக்குதல் ஆகிய மூன்று முக்கிய இலக்குகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்தில் புதிய அணு உலைகளைக் கட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவது குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படவுள்ளது.
“ஸ்டாப் பிளாக்அவுட்” என்ற முன்முயற்சிக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட இந்த மாற்று முன்மொழிவுக்கு ஏற்கனவே அந்நாட்டு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளதுடன், 55% பொதுமக்களும் இதற்கு ஆதரவளித்துள்ளனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு அணுசக்திக்கு எதிராக வாக்களித்த மத்தியவாத நாடாளுமன்ற உறுப்பினர் பெஞ்சமின் ரொடுவிட் தற்போது தனது நிலப்பாட்டை மாற்றியுள்ளார்.
“சூரிய ஒளி, நீர் மற்றும் காற்று ஆற்றல் மூலம் அணுசக்தியை முழுமையாக ஈடுசெய்ய முடியும் என்று நாங்கள் அன்று நினைத்தோம். ஆனால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்கள் மிகவும் பின்தங்கியுள்ளதால், மக்கள் தேவையை எங்களால் பூர்த்தி செய்ய முடியாதுள்ளது” என அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
மறுபுறம், அணுசக்தியின் மீளுருவாக்கத்தைப் பசுமைக் கட்சியினர் (The Greens) கடுமையாக எதிர்ப்பதுடன், இதற்கு எதிராகப் பொது வாக்கெடுப்பு (Referendum) நடத்தப்போவதாகவும் எச்சரித்துள்ளனர்.
அணுசக்தி என்பது அதிக செலவீனக் கூடியது, அதனை அமைப்பதற்கு நீண்ட காலம் எடுக்கும், அத்துடன் அது ஆபத்தானது. அதன் கழிவுகளை என்ன செய்வது என்ற கேள்விக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள திட்டத்தில் இதற்கான பதில்கள் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் லியோனோர் போர்ச்செட் சாடியுள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விவாதத்தில் உரையாற்ற உள்ளதால், இன்றைய நாடாளுமன்ற அமர்வு மிகவும் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
