நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் வெடித்துள்ள வன்முறை மோதல்களில் இரண்டு சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஒரு கைதி உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து சிறைச்சாலையில் வழமை நிலைமைக்கு கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த போதிலும், இன்று காலை விளக்கமறியல் கைதிகளுக்கும் தண்டனை பெற்ற கைதிகளுக்கும் இடையே மீண்டும் பயங்கர மோதல் வெடித்தது.
நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் பலமுறை வானோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த புதிய மோதலில் இரு சிறை அதிகாரிகள் மற்றும் ஒரு கைதி என மூவர் உயிரிழந்துள்ளதோடு, காயமடைந்த 35க்கும் மேற்பட்டோர் (பெரும்பாலானோர் சிறைச்சாலை அதிகாரிகள்) நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பலத்த காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நேற்று (05) சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற போதைப்பொருள் கடத்தல் விவகாரம் அம்பலமானதால் ஏற்பட்ட மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன் 38 கைதிகள் காயமடைந்து தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் நேற்றைய போராட்டத்தின் போது சிறைக்கூரை இடிந்து விழுந்ததில் மேலும் நான்கு கைதிகள் காயமடைந்திருந்தனர்.
தற்போது சிறைச்சாலைக்குள் ஏற்பட்டுள்ள மிக மோசமான வன்முறை நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கும், பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
