நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் விசேட விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைக்குள் இடம்பெற்று வந்த போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை ஒன்று அம்பலமானதால் ஏற்பட்ட தர்க்கமே இந்த வன்முறைக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“பூரு மூனா” என்ற பாதாள உலகக் குழு உறுப்பினருடன் நெருங்கிய தொடர்புடைய “சுரேஷ்” எனப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரே இரு குழுக்களுக்கு இடையிலான இந்த மோதலைத் தூண்டியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வன்முறை மோதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த சுமார் 35 கைதிகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த மோதலைத் தொடர்ந்து நீர்கொழும்பு சிறைச்சாலையிலுள்ள பெண் கைதிகள் குழுவொன்று சிறைச்சாலையின் கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டது. அதனைத் தொடர்ந்து, ஆண் கைதிகளும் கூரை மீது ஏறி தனியாகப் போராட்டம் நடத்தினர்.
கைதிகள் கூரை மீது ஏறி போராட்டம் நடத்திய போது, கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் நான்கு கைதிகள் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறைக்குள் இருக்கும் தங்களது உறவினர்களின் நிலைமை குறித்து அதிகாரிகள் எவ்வித தகவல்களையும் வழங்கவில்லை எனக் குற்றம் சுமத்தி, கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலைக்கு வெளியே ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கைதிகளைப் பார்ப்பதற்கு உறவினர்கள் சிலருக்கு பொலிஸார் வசதி செய்துகொடுத்தனர்.
தற்போது நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் நீர்கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கலகத் தடுப்புப் பிரிவினர் சிறைச்சாலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
