HomeFeatured Newsவெப்ப அலையிலும் சுவிஸ் மக்களின் ஆடை பழக்கம்

வெப்ப அலையிலும் சுவிஸ் மக்களின் ஆடை பழக்கம்

ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப அலை வீசி வரும் நிலையிலும், சுவிட்சர்லாந்தில் பணிக்குச் செல்லும் ஊழியர்கள் அரைக்கால் சட்டைகளுக்குப் பதிலாக நீண்ட காற்சட்டைகளையே விரும்பி அணிவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

பிற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுவிட்சர்லாந்து அலுவலகங்களில் அரைக்கால் சட்டைகளுக்கு அனுமதி இல்லை அல்லது வரவேற்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ‘கேலக்சஸ்’ சார்பில் ‘யூகவ்’ நிறுவனம் நடத்திய ஆய்வறிக்கையில் இந்த சுவாரஸ்யத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஒஸ்திரியா, இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள 2,616 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் சுவிட்சர்லாந்து ஆண்களில் 60% பேர் நீண்ட காற்சட்டைகளையும், 56% பேர் கால்களை முழுமையாக மூடும் காலணிகளையுமே  அலுவலகத்திற்கு அணிய விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் வெறும் 27% ஆண்கள் மட்டுமே வேலைக்கு அரைக்கால் சட்டைகளை அணிந்து செல்கின்றனர். இத்தாலியிலும் இதே நிலையே நீடிக்கிறது. அதேவேளை, ஜெர்மனியில் 38% பேர் அரைக்கால் சட்டைகளையும், 69% பேர் டி-ஷர்ட்டுகளையும் அணிந்து செல்கின்றனர்.

பெண்களைப் பொறுத்தவரை ஐரோப்பிய நாடுகளிடையே பெரிய வித்தியாசம் எதுவுமில்லை. பெரும்பாலான பெண்கள் தீவிர வெயிலிலும் டி-ஷர்ட் மற்றும் நீண்ட சட்டைகளையே அணிகின்றனர். மூன்றில் ஒரு பங்கு பெண்கள் மட்டுமே ஸ்கேர்ட்களை தேர்ந்தெடுக்கின்றனர்.

முறையான அலுவலக ஆடை ஒழுக்கத்தைப் பொறுத்தவரை சுவிட்சர்லாந்து கடுமையான விதிகளைக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களைச் சந்திக்கும் போது தொப்புள் தெரியும் வகையிலான ‘க்ராப் டாப்ஸ்’ (Crop tops) ஆடைகளை அணிவது பொருத்தமற்றது என 73% சுவிஸ் மக்கள் கருதுகின்றனர்.

வாடிக்கையாளர் தொடர்பு இல்லாத வேலைகளில் கூட க்ராப் டாப்ஸ் தவறானது என 57% பேர் கூறியுள்ளனர். மேலும் சுவிட்சர்லாந்தில் 72% பேர் ‘ஃப்ளிப்-ஃப்ளாப்ஸ்’ (Flip-flops) செருப்புகளுக்கும், 61% பேர் ‘ஸ்வெட்பேண்ட்ஸ்’ (Sweatpants) ஆடைகளுக்கும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பாவின் பிற நாடுகளைக் காட்டிலும் சுவிட்சர்லாந்தில் பணிச்சூழலும் ஆடை கலாச்சாரமும் இன்னும் மிகவும் பாரம்பரியமாகவும் தீவிரமானதாகவுமே பார்க்கப்படுகிறது என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular