நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பயங்கர வன்முறை மோதல் சம்பவங்கள் தனக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள நீதி அமைச்சர் ஹர்ஷன நாநாயக்கக்கார, விடயப்பொறுப்புள்ள அமைச்சர் என்ற ரீதியில் அதன் பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலையின் தற்போதைய நிலைமை குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
சிறைச்சாலையின் தற்போதைய நிலைமை பாதுகாப்புப் படையினரால் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த மோதல்களின் போது ஏற்பட்ட மனித உயிர்களின் இழப்புகளை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. உயிர்கள் பறிபோனது குறித்து நான் ஆழ்ந்த கவலையடைகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சிறைக்குள் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து அதிகாரிகள் மூலம் முறையான மற்றும் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இத்தகைய துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் ஏற்படாமல் இருக்க தேவையான அனைத்து கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என நான் உறுதியளிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இத்தருணத்தில் யாராவது ஒரு நபர் மீது குற்றம் சுமத்துவதை விட, உண்மை விபரங்களைக் கண்டறிந்து, இதுபோன்ற வன்முறைச் சூழல்கள் மீண்டும் ஏற்படாமல் தடுப்பதே தனது முதன்மையான நோக்கம் என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாநாயக்கக்கார வலியுறுத்தியுள்ளார்.
