சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் உள்ள துப்பாக்கிக் கடை ஒன்றிற்குள் புகுந்து கொள்ளையடித்த மூன்று நபர்களை, பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டையின் பின்னர் நேற்று காலை கைது செய்துள்ளனர்.
பிரான்ஸ் மற்றும் குவாதலூப்பைச் சேர்ந்த இக்குழுவினர், பொலிஸாரின் சோதனையில் இருந்து தப்பிப்பதற்காக வாகனத்தை மிக அதிவேகமாகச் செலுத்தி இந்தத் துரத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
புதன்கிழமை காலை 5:15 மணியளவில் சூரிச் மாகாணத்தின் ஃபங்கன் பகுதியில் உள்ள துப்பாக்கிக் கடையொன்றில் கொள்ளைச் சம்பவம் நடப்பதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் ரோந்துப் படையினர், அங்கிருந்து பிரான்ஸ் நாட்டுப் பதிவு இலக்கத் தகடு கொண்ட காரில் தப்பியோடிய கொள்ளையர்களைக் கண்டறிந்தனர்.
பக் அம் இர்ச்செல் மற்றும் பெர்க் அம் இர்ச்செல் ஆகிய பகுதிகள் வழியாகக் கொள்ளையர்கள் தப்பியோடிய போது, அந்த வீதிகளில் பயணித்த ஏனைய வாகன சாரதிகளுக்கும் பாதசாரிகளுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான முறையில் காரைச் செலுத்தியுள்ளனர்.
வேகக் கட்டுப்பாடுகள் எதையும் மதிக்காமல் மிக அதிவேகமாகப் பயணித்த கொள்ளையர்கள், பிரதான வீதிகளைத் தவிர்த்து மண் வீதிகள், விளைநிலங்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான குடியிருப்பு காணிகளுக்குள்ளும் காரைச் செலுத்தித் தப்பிக்க முயன்றனர்.
இறுதியாக, ஜெர்மனி எல்லையை ஒட்டியுள்ள ஃபிளாச் (Flaach) பகுதியில் வைத்து பொலிஸ் ரோந்துப் பிரிவினர் அந்தக் காரை மடக்கிப் பிடித்தனர்.
காரில் இருந்த மூன்று பேரையும் கைது செய்த பொலிஸார், காரின் பின்பகுதிப் பெட்டகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த திருடப்பட்ட பல துப்பாக்கிகளையும் மீட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் 19 மற்றும் 24 வயதுடைய பிரான்ஸ் நாட்டுப் பிரஜைகள் ஆவர். மற்றைய நபர் குவாதலூப்பைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞராவார். பொலிஸ் விசாரணைக்குப் பின்னர் இவர்கள் மூவரும் பொது வழக்கறிஞர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
