இலங்கை மருத்துவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இடுப்புப் பகுதியில் ஒட்டிப் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை பேராதனை மருத்துவர்கள் குழுவினர் மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பிரித்துள்ளனர்.
பேராதனை போதனா மருத்துவமனை, பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் மருத்துவமனை மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இந்த வரலாற்றுச் சாதனை சாத்தியமாகியுள்ளது.
மாவனல்லை, அரநாயக்க பகுதியைச் சேர்ந்த லினுலி தருல்யா மற்றும் லிதுலி மனுல்யா என்ற இந்த இரட்டை பெண் குழந்தைகள், கடந்த 2021 ஆம் ஆண்டு இடுப்புப் பகுதியில் ஒட்டிப் பிறந்தனர். இது மிகவும் அரிதான மற்றும் சிக்கலான ஒரு பிறவிக் குறைபாடாகும்.
இறுதி அறுவை சிகிச்சைக்காக, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மூன்று நிறுவனங்களையும் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் விரிவான மருத்துவப் பரிசோதனைகள், பல்வேறு பூர்வாங்க சிகிச்சைகள் மற்றும் முறையான திட்டமிடல்களை மேற்கொண்டு வந்தனர்.
கடந்த ஜூன் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த அதிநவீன அறுவை சிகிச்சை மூலம், பிறந்தது முதல் ஒட்டி வாழ்ந்த இரட்டையர்கள் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டனர். இதன் மூலம் அவர்கள் இருவரும் இனி வரும் காலங்களில் சாதாரண, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வழிவகை செய்யப்பட்டுள்ளது.
