எதிர்வரும் மாதங்களில் ஏற்படக்கூடிய ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நோக்கில், நாட்டில் நீர் முகாமைத்துவத்தை பலப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்து வருவதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பயனுள்ள தயாரிப்புகளையும் அவசரகாலச் செயற்பாடுகளையும் உறுதி செய்வதற்காக, நீர் முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான அனைத்து நிறுவனங்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பொறிமுறையொன்று ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையில் வழக்கமாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வறண்ட வானிலை நிலவுவது இயல்பு என்றாலும், இந்த ஆண்டு வறட்சியின் தாக்கம் வழமையை விடக் கடுமையாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாத நடுப்பகுதியில் வடகீழ் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அந்த மாதத்தில் வழக்கத்தை விடக் குறைவான மழையே பெய்யக்கூடும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழையின் அளவு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத இந்தச் சூழ்நிலையைச் சமாளிப்பதற்கான சிறந்த நீர் முகாமைத்துவ உத்தியை உருவாக்குவதற்காக, விவசாயத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், மகாவலி அதிகாரசபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) மற்றும் மின்சாரத் துறை அதிகாரிகளுடன் அரசாங்கம் ஏற்கனவே கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக நீர்வழங்கல் அமைச்சர் கூறினார்.
தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் தங்களது தயார்நிலை மற்றும் அவசரகாலத் திட்டங்களை தயாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இத்திட்டங்கள் வரும் ஜூலை 20ஆம் திகதி மீண்டும் விரிவாக ஆய்வு செய்யப்படும் என்றும் அமைச்சர் சுசில் ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
