அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள புதிய உடன்படிக்கையின் அறிவிப்பைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கணிசமான வீழ்ச்சியைக் கண்டுள்ளன.
மத்திய கிழக்கில் நிலவி வந்த எரிசக்தி விநியோகத் தடைகள் குறித்த கவலைகள் இதன் மூலம் தணிந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
டெஹ்ரான் மற்றும் வாஷிங்டன் இடையேயான இந்த ஒப்பந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து, எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றங்கள் பின்வருமாறு:
பிரெண்ட் கச்சா எண்ணெய் : எதிர்கால வர்த்தக விலை 4% வரை சரிவடைந்து, ஒரு பேரல் 83.96 டொலராக வீழ்ச்சியடைந்தது.
அமெரிக்க கச்சா எண்ணெய் : இதன் விலையும் கணிசமாகக் குறைந்து, வர்த்தக அமர்வின் குறைந்தபட்ச அளவாக ஒரு பேரல் 80.25 டொலரைத் தொட்டது.
கடந்த சில வாரங்களாக அமெரிக்கா – ஈரான் இடையே நிலவி வந்த தீவிர அரசியல் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலையற்ற தன்மையும், எண்ணெய் விநியோகத்தில் தடைகளும் ஏற்படலாம் என முதலீட்டாளர்கள் அச்சமடைந்திருந்தனர். இதனால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது.
குறிப்பாக, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் மிக முக்கிய கடல்வழியாகக் கருதப்படும் ‘ஹார்முஸ் நீரிணை‘ உள்ளிட்ட முக்கிய கப்பல் போக்குவரத்து பாதைகளின் பாதுகாப்பு மற்றும் இராணுவ மோதல்கள் குறித்த அச்சமே இந்த விலை உயர்வுக்குக் காரணமாக இருந்தது.
தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் குறைந்துள்ளதற்கான அறிகுறிகள் தென்படுவதால், வர்த்தகர்கள் நிம்மதியடைந்துள்ளனர். இதன் நேரடி விளைவாகவே சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
எனினும், இந்த முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் அது பிராந்திய ஸ்திரத்தன்மை, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கங்களை சர்வதேச சந்தை தற்போது உன்னிப்பாகக் கவனித்து வருகின்றது.
