வளைகுடா பகுதியில் இடம்பெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதற்கட்ட தற்காலிக ஒப்பந்தம் ஒன்றில் அமெரிக்காவும் ஈரானும் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த ஒப்பந்தத்தின் முழுமையான விபரங்கள் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்பதுடன், நிரந்தர அமைதி உடன்படிக்கை ஒன்று இன்னும் எட்டப்படவில்லை என இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.
ஜி7 (G7) உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரான்ஸ் சென்றடைந்த அதிபர் ட்ரம்ப், “ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது” என்று உறுதிப்படுத்தினார்.
மேலும், இந்த வார வெள்ளிக்கிழமை ஜெனீவாவில் நடைபெறவுள்ள உத்தியோகபூர்வ கையெழுத்திடும் நிகழ்வில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (JD Vance) கலந்துகொள்வார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கையை மேலும் 60 நாட்களுக்கு இந்த ஒப்பந்தம் நீடிக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் முடக்கி வைத்திருந்த உலகின் மிக முக்கிய எண்ணெய் வர்த்தகப் பாதையான ‘ஹோர்முஸ் நீரிணை‘ மீண்டும் திறக்கப்படும்.
உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் இந்த நீரிணை மீண்டும் திறக்கப்படுவதால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது கடந்த மார்ச் 10 ஆம் திகதிக்குப் பின்னர் மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படலாம், முடக்கப்பட்ட வெளிநாட்டு சொத்துக்கள் விடுவிக்கப்படலாம் மற்றும் வளைகுடா நாடுகளின் நிதியுதவியுடன் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான மறுகட்டமைப்பு நிதியம் உருவாக்கப்படலாம் என அமெரிக்க மற்றும் ஈரான் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனினும், இந்த நன்மைகளைப் பெற ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கக் கூடாது மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா போன்ற ஆயுதக் குழுக்களுக்கான ஆதரவை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு ஈரான் கட்டுப்பட வேண்டும் என பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த கடினமான பேச்சுவார்த்தைகள் அடுத்த கட்டத்தில் கையாளப்படும் எனத் தெரிகிறது.
இந்த ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் தரப்பில் கடுமையான அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. லெபனானில் இருந்து இஸ்ரேலிய படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்று ஈரான் வலியுறுத்திய போதிலும், அதற்கு தாம் உடன்படவில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
தெற்கு லெபனானில் இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து இருக்கும் என்றும், ஹிஸ்புல்லா அமைப்பின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் உரிமை இஸ்ரேலுக்கு உண்டு என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இஸ்ரேலிய உயர் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவிக்கையில், இந்த ஒப்பந்தம் “இஸ்ரேலுக்கு மிகவும் மோசமானது” என்று அரசாங்கத்தின் ஒட்டுமொத்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
குறைந்தது 7,000 க்கும் மேற்பட்ட உயிர்களை காவுகொண்ட இந்த வளைகுடா மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்பட்டாலும், நிரந்தர அமைதி திரும்புமா என்பது அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளிலேயே தங்கியுள்ளது.
