சுவிட்சர்லாந்தின் மீதான 12.5% புதிய கூடுதல் வர்த்தக வரிகளை (Tariffs) விதிக்க அமெரிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ள திட்டம் தனக்கு எந்தவொரு அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை என்று சுவிஸ் ஜனாதிபதி கை பார்மலின் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சுமூகமான வர்த்தக உடன்பாட்டை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் இன்டர்லகான் நகரில் நடைபெற்ற ‘சுவிஸ் பொருளாதார மன்ற’ மாநாட்டின் ஆரம்ப விழாவில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கட்டாய உழைப்பு அல்லது அடிமைத்தனம் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடுக்க சுவிட்சர்லாந்து உட்பட பல நாடுகள் தவறிவிட்டதாகக் கூறி, அமெரிக்கா இந்த புதிய வரி விதிப்பு திட்டத்தை முன்வைத்துள்ளது.
எனினும், அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகளை சுவிட்சர்லாந்து திட்டவட்டமாக மறுத்துள்ளதுடன், அதற்கான விளக்கத்தை ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளதாகவும் சுவிஸ் பொருளாதார அமைச்சராகவும் இருக்கும் ஜனாதிபதி பார்மலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், “சுவிட்சர்லாந்தில் கட்டாய உழைப்பு மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்க ஏற்கனவே கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சுவிஸ் நிறுவனங்களும் அதிகாரிகளும் இத்தகைய விடயங்கள் நடக்காமல் இருப்பதை மிகக் கவனமாக உறுதி செய்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
இந்த புதிய அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே திட்டமிட்டபடி, பாரிஸ் நகரில் அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஜேமிசன் கிரீர் உடன் சுவிஸ் தூதுக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சுவிட்சர்லாந்தின் சட்டதிட்டங்களில் சில மாற்றங்களை கொண்டு வருவதாக அறிவித்தால், இந்த புதிய வரி விதிப்பு குறைக்கப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த பார்மலின், மற்ற நாடுகளுக்கு இவ்வாறு வரிக் குறைப்பு வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவின் இந்த புதிய 12.5% கூடுதல் வரி விதிப்புக்கு சுவிட்சர்லாந்து உட்பட மொத்தம் 54 நாடுகள் ஆளாக நேரிடும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம், ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஐக்கிய இராச்சியம் (UK) போன்ற நாடுகளுக்கு இந்த வரி விகிதம் 10% ஆக இருக்கும் என்று முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த வரி திட்டங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை, இது குறித்த பொதுமக்களின் கருத்துக்களைப் பெற வரும் ஜூலை 6ம் திகதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
நாம் இந்த சூழலில் பதற்றமடையாமல் அமைதியாக இருந்து, வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டும். ஏனெனில், அமெரிக்காவும் இதில் ஒரு நிலையான தீர்வையே விரும்புகிறது என ஜனாதிபதிபார்மலின் மேலும் தெரிவித்துள்ளார்.
