HomeFeatured Newsசுவிஸில் 'லிஜியோனெல்லா' பாக்டீரியா தொற்று: பாதிப்பு

சுவிஸில் ‘லிஜியோனெல்லா’ பாக்டீரியா தொற்று: பாதிப்பு

சுவிட்சர்லாந்தின் பாசெல்-சிட்டி கான்டனில் ‘லிஜியோனெல்லா நியுமோபிலா’ பாக்டீரியா தொற்றினால் மேலும் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட புதிய நோயாளிகளில் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம், பாசெல் நகரில் அண்மையில் பரவத் தொடங்கிய இத்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 6 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளில் ஒருவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முன்னதாக இத்தொற்று பரவலின் காரணமாக ஒருவர் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

க்லைன்பாசெல் பகுதியில் உள்ள ‘மேனர்’ வணிக வளாகத் தலைமையகத்தின் கூரையில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு குளிரூட்டும் கோபுரங்களே இத்தொற்று பரவலுக்கு மிக முக்கியக் காரணியாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. அவை உடனடியாகச் செயல்பாட்டிலிருந்து நிறுத்தப்பட்டு, தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, சுவிஸ் காற்று மற்றும் நீர் சுகாதார சங்கம், ஆவியாதல் குளிரூட்டும் அமைப்புகளை இயக்கும் நிறுவனங்கள் அவற்றின் பாதுகாப்பான செயல்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

அறிவியல் ஆய்வுகளின்படி, முறையாக வடிவமைக்கப்பட்டு, தொடர்ச்சியாகப் பராமரிக்கப்படும் குளிரூட்டும் அமைப்புகளால் மனித சுகாதாரத்திற்கு எவ்வித ஆபத்தும் இல்லை.

எனினும், பராமரிப்புப் பொறுப்புகள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும் எனவும், தகுதி வாய்ந்த ஊழியர்களைக் கொண்டு தொழில்நுட்பத் தரநிலைகள் தவறாமல் பின்பற்றப்பட வேண்டும் எனவும் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular