நீதிமன்றை அவமதிப்பு செய்ததாக முக்கிய எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேகைது செய்யப்பட்டமைக்கு எதிராக நடத்தப்பட்ட சத்யாகிரகப் போராட்டத்தின் போது நீதிமன்றத்தை விமர்சித்து கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகளான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட ஆறு நபர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளைப் பதிவு செய்ய மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் செய்திகளை அறிக்கையிடுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சுகீஸ்வர பண்டார, திலித் ஜயவீர, அசங்க நவரத்ன, சிரேஷ்ட விரிவுரையாளர் மஹிந்த பத்திரண ஆகியோருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
சுரேஷ் சலலேவின் கைதைக் கண்டித்து ஜூலை 7 முதல் 15 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட சத்யாகிரகப் போராட்டத்தின் போது, இவர்கள் வெளியிட்ட பகிரங்க அறிக்கைகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம்மேற்கொண்ட விசாரணைகளின் அறிக்கைகள், கோட்டை நீதவான் பசான் அமரசேகரவிடம் சமர்ப்பித்தது.
சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் சான்றுகளை ஆராய்ந்த நீதவான், அந்த நபர்களின் பகிரங்க பேச்சுக்கள் தற்போதைய நிலுவையில் உள்ள நீதிமன்ற நடவடிக்கைகளை வெளிப்படையாக விமர்சிப்பதாக அமைந்திருப்பதை அவதானித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின்கீழ் குறித்த அரசியல்வாதிகள் மற்றும் நபர்களுக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
