ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் Airbus விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோது, ஐரோப்பிய விமான உற்பத்தி நிறுவனத்திடமிருந்து அமெரிக்க டொலர் 20 இலட்சம் (USD 2 million) இலஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணையை முன்னெடுக்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவும் (CIABOC), குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் (CID) இணைந்து அமைத்துள்ள விசேட பொலிஸ் குழு விரைவில் அவுஸ்திரேலியாவிற்கு பயணிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் சந்தேகநபர்கள் மற்றும் சாட்சியாளர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்து, இலஞ்சப் பணம் பரிமாறப்பட்டதாக நம்பப்படும் வங்கிக் கணக்குகள் தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதே இந்தப் பயணத்தின் பிரதான நோக்கமாகும்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்பே நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், குறித்த வங்கிக் கணக்குகளில் ஒன்றின் உரிமையாளராகக் கூறப்படும் டபிள்யூ.டி. நிமல் பெரேரா தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருவதாக தெரிவித்திருந்தது.
இந்த வழக்கின் பிரதான சந்தேகநபர்களில், முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நயோமலி விஜேநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் சாமல் ராஜபக்ஷவின் மகன் ஷமீந்திர ராஜபக்ஷ ஆகியோர் அடங்குகின்றனர்.
இருவரும் தற்போது வெளிநாடுகளில் இருப்பதாகவும், அவர்களை கைது செய்வதற்காக கொழும்பு மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றங்கள் ஏற்கனவே பிடியாணைகளைப் பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்னெடுத்து வரும் நிலையில், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தனியாக வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக பத்து Airbus விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோது, புரூணையில் போலி நிறுவனம் ஒன்றை உருவாக்கி, ஐரோப்பிய விமானத் தொழில்துறை நிறுவனமான European Aeronautic Defence and Space Company (ADS) நிறுவனத்திடமிருந்து 1,454,645.54 யூரோ (சுமார் 20 இலட்சம் அமெரிக்க டொலர்) இலஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மையமாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
