கத்தாரை உலகளவில் செல்வாக்கு மிக்க ஒரு நவீன மற்றும் பெரும் பணக்கார நாடாக மாற்றியமைத்த அந்நாட்டின் ‘Father Emir’ (முன்னாள் மன்னர்) ஷேக் ஹமத் பின் கலிஃபா அல் தானி தனது 74ஆவது வயதில் காலமானார்.
அவரது உடல் தோஹாவில் எளிய முறையில் அடக்கம் செய்யப்பட்டது.
அவரது மறைவு குறித்த அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை காலை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கத்தாரின் தலைநகரில் அமைந்துள்ள இமாம் முஹம்மது அப்துல் வஹ்ஹாப் மசூதியில், மாலை நேரத் தொழுகைக்குப் பிறகு அவரது எளிய இறுதிச் சடங்கு நடைபெற்றது.
கத்தாரின் பாரம்பரிய உடைகளை அணிந்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள், ஷேக் ஹமத்தின் உடலை நோக்கி கைகளைக் கூப்பியவாறு இறுதித் தொழுகையில் ஈடுபட்டனர்.
தொழுகைக்குப் பிறகு, அவரது மகனும் கத்தாரின் தற்போதைய மன்னருமான ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி உள்ளிட்ட நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் அவரது உடலை மசூதியிலிருந்து சுமந்து சென்றனர். தோஹாவின் வடக்கே அமைந்துள்ள லுசைல் (Lusail) மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஷேக் ஹமத் 1995 முதல் 2013 வரை ஆட்சி புரிந்த காலத்தில், கத்தாரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 24 மடங்குக்கும் மேலாக அதிகரித்தது.
நாட்டின் பரந்த எரிவாயு வளங்களை மேம்படுத்துவதில் அவர் காட்டிய தீவிர அக்கறையே இதற்கு முக்கிய காரணமாகும். இதன் விளைவாக, 2006ஆம் ஆண்டிற்குள் இந்த சிறிய நாடு உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதியாளராக உருவெடுத்தது.
இன்று கத்தாரின் அரசியல் செல்வாக்கு உலகம் முழுவதும் பரவியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றங்கள் உட்பட பல சர்வதேச மோதல்களில் கத்தார் ஒரு முக்கிய மத்தியஸ்தராக (Mediator) செயல்பட்டு வருகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டில் கத்தார் ஆண்களுக்கான பிஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தியது. மேலும், 1996ஆம் ஆண்டில் இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் ‘அல் ஜசீரா’ (Al Jazeera) செய்தி ஊடகம் தொடங்கப்பட்டது. இது சில வருடங்களிலேயே உலகின் மிகச் செல்வாக்குமிக்க ஊடக வலையமைப்பாக மாறியது.
ஷேக் ஹமத்தின் ஆட்சிக் காலத்தில், 2004ஆம் ஆண்டில் கத்தாரின் முதலாவது நிரந்தர அதாவது நிலையான அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டது.
அத்துடன், பெண்கள் வாக்களிக்கவும் தேர்தலில் போட்டியிடவும் அனுமதிக்கும் நகராட்சித் தேர்தல்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.
பின்னர், 2013ஆம் ஆண்டில் அவர் தனது 33 வயதான மகன் ஷேக் தமீமிடம் அதிகாரத்தை ஒப்படைத்து, அரபு வளைகுடா நாடுகளின் பாரம்பரிய ஆட்சியாளர்களிடையே ஒரு அரிய முன்னுதாரணமாக ஆட்சியைத் துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
