HomeFeatured Newsஉக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் உக்கிர தாக்குதல்: ஏவுகணை பற்றாக்குறையால் 18 பேர் பலி

உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் உக்கிர தாக்குதல்: ஏவுகணை பற்றாக்குறையால் 18 பேர் பலி

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரே வாரத்தில் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய இரண்டாவது பெரிய வான்வழித் தாக்குதல் இதுவாகும்.

ரஷ்யா ஏவிய 23 அதிவேக பாலிஸ்டிக் ஏவுகணைகளில் ஒன்றைக்கூட உக்ரைன் விமானப் படையால் சுட்டுவீழ்த்த முடியவில்லை. உக்ரைனிடம் வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் கடுமையான பற்றாக்குறை” நிலவுவதே இதற்கு காரணம் என்று உக்ரைன் விமானப் படை ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது X பக்கத்தில் விபரிக்கும் போது, “ரஷ்யா ஒட்டுமொத்தமாக 68 ஏவுகணைகளையும் 351 ட்ரோன்களையும் கொண்டு இந்த பாரிய தாக்குதலை நடத்தியுள்ளது.

உக்ரைன் ராணுவம் 37 ஏவுகணைகளையும் 326 ட்ரோன்களையும் சுட்டுவீழ்த்திய போதிலும், பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தடுக்க முடியாமல் போயுள்ளது” எனத் தெரிவித்தார்.

மக்களின் உயிரைக் காக்கும் ‘பேட்ரியட்’ வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மேற்கத்திய நாடுகளின் கையிருப்பில் மட்டுமே இருக்கும் வரை, ரஷ்யா உக்ரைனின் குடியிருப்புத் தளங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.

ரஷ்யாவின் இந்தத் தாக்குதலால் கீவ் நகரில் மூன்று பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் பகுதியளவில் இடிந்து விழுந்துள்ளன. கட்டிடங்களில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக ஹெலிகாப்டர்கள் மூலம் ஆறுகளிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு அணைக்கப்பட்டது.

கீவ் இராணுவ நிர்வாக அதிகாரி திமூர் த்காச்சென்கோ கூறுகையில், தலைநகரில் 49 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்தார். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மோப்ப நாய்களுடன் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

துருக்கியின் அங்காரா நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கவுள்ள நேட்டோ உச்சிமாநாட்டில், உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவது குறித்து நட்பு நாடுகள் “உறுதியான முடிவுகளை” எடுக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மாநாட்டின் இடையே அவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைனின் அவசரத் தேவை குறித்து நேட்டோ மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் உறுதியளித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular