கனடாவின் இரண்டாவது மிகப்பெரிய விமான நிறுவனமான வெஸ்ட்ஜெட் நிறுவனத்தின் 4,000-க்கும் மேற்பட்ட விமானப் பணிப்பெண்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:01 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
இதனால் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான பயணிகள் ஆங்காங்கே தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கனடிய பொது ஊழியர்கள் சங்கம் ஜூலை 30 அன்று 72 மணி நேர வேலைநிறுத்த அறிவித்தலை வெளியிட்டதைத் தொடர்ந்து, சனிக்கிழமை மாலை 3:00 மணி நிலவரப்படி 276 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெஸ்ட்ஜெட் அறிவித்துள்ளது.
பதிலடியாக, விமான நிறுவனமும் 72 மணி நேர கதவடைப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்ததுடன், தங்களது விமான சேவைகளை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் நிறுத்தும் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது.
வேலைநிறுத்தத்திற்கான பிரதான காரணம் தரைவழியாகச் செய்யப்படும் பணிகளுக்கான ஊதியம் தொடர்பிலான சர்ச்சையாகும்.
தரைவழிப் பணிகளுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லை என்றும், நியாயமான ஒப்பந்தத்தை எட்டவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் CUPE 8125 தலைவர் ஆலியா ஹுசைன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் அரசாங்கம் தலையிடாமல் இருதரப்பு பேச்சுவார்த்தை முறையை மதிக்க வேண்டும் என்றும் சங்கம் கோரியுள்ளது.
‘கிரெடிட் ஹவர்‘ (Credit hour) முறையின் கீழ், விமானப் பறப்பு நேரம், தரைவழிப் பணிகள் மற்றும் தாமதங்கள் அனைத்துக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக உயர் ஊதிய விகிதம் வழங்கப்படுவதாக வெஸ்ட்ஜெட் மறுத்துள்ளது. இதன்படி ஒரு மணி நேரத்திற்கு $28.88 முதல் $53.61 வரை ஊதியம் வழங்கப்படுவதாகவும், மாதத்திற்கு 80 மணி நேரம் பணியாற்றும் முழுநேரப் பணியாளர்கள் $2,300 முதல் $4,300 வரை ஈட்டுவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளதோடு, தாங்கள் முன்வைத்த புதிய முன்மொழிவு பணிப்பெண்களின் முன்னுரிமைகளுக்குத் தீர்வு காண்பதாக அமைந்திருந்தது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் தற்போதைக்கு விமான சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு, பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
