மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டின் ஏனைய அனைத்துச் சிறைச்சாலைகளின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலும் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாகச் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவமெதவத்த தெரிவித்துள்ளார்.
இன்று மஹர சிறைச்சாலையின் தற்போதைய நிலைமைகளைப் பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக்கூறினார்.
வெலிக்கடை, மெகசின், களுத்துறை, நீர்கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனைத்துச் சிறைச்சாலைகளின் பாதுகாப்பு தொடர்பிலும் தற்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகச் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
நேற்று ஏற்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவியதுடன், அப்பதற்றம் இன்று அதிகாலை வரை நீடித்ததாக அவர் தெரிவித்தார்.
கைதிகள் பலர் சிறைச்சாலையின் பெருமளவிலான சொத்துக்களுக்குக் கடுமையான சேதங்களை விளைவித்துள்ளதாகச் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
எனினும், இன்று காலை வேளையளவில் சிறைச்சாலைகள் திணைக்களம், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், விமானப்படை மற்றும் கடற்படை உள்ளிட்ட அனைத்துப் பாதுகாப்புப் பிரிவினரும் இணைந்து நிலைமையை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
அடுத்த சில மணித்தியாலங்களுக்குள் சிறைச்சாலையின் பாதுகாப்பை முழுமையாக உறுதிசெய்து, அதன் அன்றாட நடவடிக்கைகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த மேலும் தெரிவித்துள்ளார்.
