தற்போதைய சூழ்நிலையில் முறையான பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் எரிபொருள் விலை திருத்தங்களை மேற்கொள்ளாவிட்டால், இலங்கை மீண்டும் 2022-ஆம் ஆண்டில் எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை நோக்கியே பயணிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொள்கை வகுப்பு தொடர்பான முன்னணி ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான அட்வகாடா (Advocata) நிறுவனத்தின் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தரவுகளை பகுப்பாய்வு செய்யும் போது, சரியான பாதையில் செல்லவில்லை என்பதற்கான அபாய சமிக்ஞைகள் ஏற்கனவே தெரியத் தொடங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகரிக்கும் எரிபொருள் நுகர்வு 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் விலைகள் சரியாக திருத்தப்படாததால் எரிபொருள் நுகர்வு வேகமாக அதிகரித்தது என தெரிவித்துள்ளார்.
அதே நிலைமை தற்போதைய 2026-ஆம் ஆண்டிலும் காணப்படுவதாகவும் குறிப்பாக, 2025 மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 2026 மார்ச் மாதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் நுகர்வு பெருமளவில் அதிகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை திருத்தம் தாமதமாகும் என்ற அச்சத்தில், மக்கள் அதிகளவில் எரிபொருளைச் சேமித்து வைக்க முயற்சிப்பதே இதற்கு ஒரு காரணமாகும் என தெரிவித்துள்ளார்.
வங்கி கட்டமைப்புக்கு ஆபத்து தரவுகளின்படி, இலங்கை பெற்றோலியவளக் கூட்டுத்தாபனம் தற்போது ஒரு லீட்டர் பெட்ரோலில் சுமார் 113 ரூபாயும், ஒரு லீட்டர் டீசலில் சுமார் 238 ரூபாயும் நட்டம் அடைந்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நட்டம் இறுதியாக மின்சார சபையையும் பாதிக்கும் எனவும் இந்த இரு நிறுவனங்களும் தங்களது நிதித் தேவைக்காக இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி போன்ற அரசுக்கு சொந்தமான வங்கிகளை நாடுவதால், ஒட்டுமொத்த வங்கி கட்டமைப்பும் ஆபத்தில் விழும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2021/22 காலப்பகுதியிலும் இதே நிலைமையே ஏற்பட்டதாகவும், அப்போது வங்கி கட்டமைப்பை ஸ்திரப்படுத்த 400 பில்லியன் ரூபாய்க்கும் மேல் செலவிட வேண்டியிருந்ததாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும் என சர்வதேச அளவில் கணிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் திடீரென விலை அதிகரித்தால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது எனவும், அதன் விளைவாக ரூபாய் மதிப்பு மீண்டும் வீழ்ச்சியடையலாம் அல்லது மீண்டும் எரிபொருள் வரிசைகள் உருவாகலாம் எனவும்ம் தனநாத் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்.
சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காவிட்டால், 2022-ஆம் ஆண்டில் ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமற்ற நிலை மீண்டும் உருவாவதற்கான கடுமையான ஆபத்து உள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
