நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது தொடர்பாக அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள அரசியலமைப்புத் திருத்தம் குறித்து கலந்துரையாடுவதற்காக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச் சந்திக்க அனுமதி கோரியுள்ளது.
முன்னதாக, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுடன் நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய, தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த அரசியலமைப்புத் திருத்தத்தைக் கைவிட வேண்டும் என்பதற்கான தங்களது நிலைப்பாட்டை நீதி அமைச்சரிடம் தெளிவுபடுத்தியதாகத் தெரிவித்தார்.
சங்கத்தின் சிறப்புக் பொதுக்கூட்டத்தில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், உத்தேசிக்கப்பட்ட திருத்தம் தொடர்பான சங்கத்தின் எதிர்ப்பு நிலைப்பாடும், 2023ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வின் அடிப்படையில் வழங்கப்பட்ட பரிந்துரைகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
விவகாரம் குறித்து ஜனாதிபதியுடன் நேரில் கலந்துரையாடக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை ஜனாதிபதியிடம் கொண்டு சேர்ப்பதாக நீதி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
சட்டத்தரணிகள் சங்கத்தின் சமர்ப்பிப்புகளை முழுமையாக ஆய்வு செய்து, ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கிய பின்னர் அரசாங்கத்தின் பதில் அறிவிக்கப்படும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சங்கம் சமர்ப்பித்துள்ள அறிக்கை கவனமாக பரிசீலிக்கப்பட்டு, இதுகுறித்துத் துறை சார்ந்த நிபுணர்களுடன் மேலும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என நம்புவதாக ராஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.
அதேநேரம், இக்கூட்டத்தைத் தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணிப்பது அல்லது போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து சங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும், அது குறித்து விவாதிக்கப்படவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
