HomeFeatured Newsஎச்-1பி வீசா தொடர்பில் அமெரிக்க நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு

எச்-1பி வீசா தொடர்பில் அமெரிக்க நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு

அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட உயர் தொழில்நுட்பத் துறைகளில் வெளிநாட்டு வல்லுநர்களைப் பணியமர்த்துவதற்காக வழங்கப்படும் H-1B விசாக்களுக்கு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த 100,000 டொலர்கள் விண்ணப்பக் கட்டண உத்தரவை அமெரிக்க மத்திய நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

ஜனாதிபதியின் இந்த அதிரடி உத்தரவு சட்டவிரோதமானது எனவும், அவருக்கு இத்தகைய கட்டணத்தை விதிக்க அதிகாரம் இல்லை எனவும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த பாஸ்டன் நகர மத்திய நீதிமன்ற நீதிபதி லியோ சொரோகின், 42 பக்கங்கள் கொண்ட தனது தீர்ப்பில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

“அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கைகளில் இத்தகைய பெரிய கட்டண மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு (Congress) மட்டுமே உள்ளது. அதிபர் ட்ரம்ப் விதித்த இந்த 100,000 டொலர் கட்டணமானது ஒரு ‘வரி’ விதிப்பைப் போன்றதாகும். குடியேற்ற விவகாரங்களில் தன்னிச்சையாக வரி விதிக்க அதிபருக்கு எந்தவொரு சட்டப்பூர்வ அதிகாரமும் நாடாளுமன்றத்தால் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவினால் நியமிக்கப்பட்ட நீதிபதி சொரோகின், ட்ரம்பின் இந்த கொள்கையை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

H-1B விசா திட்டம் அமெரிக்க நிறுவனங்களால் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறி, அதனைத் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஆண்டு அதிபர் ட்ரம்ப் இந்த டொலர் 100,000 கட்டணக் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தார்.

இதனை எதிர்த்து, டெமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்த மாநில அரசு தலைமை வழக்கறிஞர்களின் கூட்டமைப்பு கடந்த டிசம்பர் மாதம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இக்கட்டணம் தங்களது மாநிலங்களில் உள்ள கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் பெரும் ஆள் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என அவர்கள் வாதிட்டனர்.

இந்த விசா, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் போன்ற பிரத்யேக துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த வெளிநாட்டுப் பட்டதாரிகளுக்கு வழங்கப்படுகிறது.

மூன்று ஆண்டுகள் செல்லுபடியாகும் இந்த விசாவை, மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும்.

அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்கள் உலகளாவிய சந்தையில் தங்களின் போட்டித்திறனைத் தக்கவைத்துக் கொள்ளவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்த விசா பெரிதும் உதவுகிறது என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ கொள்கையை முழுமையாக ஆதரிப்பதாக அமெரிக்க நீதித்துறைப் பேச்சாளர் நடாலி பால்டாசரே தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் பணியாளர்களைப் புறக்கணித்து, வெளிநாட்டுப் பணியாளர்களைத் தவறாகப் பயன்படுத்தும் நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நியூயார்க் மாநில தலைமை வழக்கறிஞர் லெட்டிஷியா ஜேம்ஸ் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார். “இந்த முக்கிய விசா திட்டத்தையும், அதன் மூலம் உருவாகும் வேலைவாய்ப்புகளையும் அழிக்க முயன்ற ட்ரம்ப் நிர்வாகத்தின் சட்டவிரோத முயற்சிக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. எங்கள் மாநிலத்திற்குப் பங்காற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம், என அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular