HomeFeatured Newsஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்

 

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய புதிய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.

அமைதிக்கான உடன்படிக்கைக்கு ஈரான் “மிகவும் தாமதம்” செய்வதாகவும், அதன் காரணமாக ஈரான் மீது “கடுமையான” தாக்குதல் நடத்தப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்த சில மணி நேரங்களிலேயே அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

ஈரானின் தேவையற்ற மற்றும் தொடர்ச்சியான அத்துமீறல்களுக்குப் பதிலடியாக, புதன்கிழமை அன்று தற்காப்புத் தாக்குதல்களை தொடங்கியதாக அமெரிக்க மத்திய கட்டளைகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு கப்பல்கள் மீது IRGC தாக்குதல் நடத்தியதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில், வளைகுடா பகுதியில் உள்ள கெஷ்ம் (Qeshm) தீவு, பண்டார் அப்பாஸ் மற்றும் சிரிக் உள்ளிட்ட பல ஈரானிய நகரங்களில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.

அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஹோர்முஸ் நீரிணை “அனைத்து வகையான கப்பல்களுக்கும் முழுமையாக மூடப்படுவதாக” ஈரானிய அரசு ஊடகம் அறிவித்தது.

ஆனால், இக்கூற்றை மறுத்துள்ள அமெரிக்க மத்திய கட்டளைகம், வணிகக் கப்பல்கள் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணித்து வருவதாகக் கூறியுள்ளது.

இந்த நீரிணை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உடனடியாக உயர்ந்தது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஆசிய வர்த்தகத்தின் போது 2% அதிகரித்து, ஒரு பேரல் 95 டாலருக்கும் அதிகமாக உயர்ந்தது.

நேற்று நாம் அவர்களைக் கடுமையாகத் தாக்கினோம், இன்றும் அவர்களைக் கடுமையாகத் தாக்குவோம். ஈரானிய தலைவர்கள் ஒரு உடன்படிக்கைக்கு வர நீண்ட காலம் எடுத்துக்கொள்கிறார்கள் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்த ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian), எந்தவொரு அழுத்தம் அல்லது அச்சுறுத்தலுக்கும் எதிராக ஈரான் உறுதியுடன் நிற்கும் என்று கூறினார்.

அதேநேரம், அமெரிக்கா முரண்பாடான செய்திகளை அனுப்பி தங்களது இராஜதந்திர பேச்சுவார்த்தை செயல்முறையை கெடுப்பதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) கூறுகையில், ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது குண்டுகள் வீசப்படும் என்றும், ஈரானுக்கு உடன்படிக்கை செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டும் அவர்கள் அதனைப் பயன்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இரு வார கால தற்காலிக போர்நிறுத்தம் ஒன்று எட்டப்பட்டது. அதன் பின்னரும் இரு நாடுகளும் அவ்வப்போது தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தன.

ஆனால், சமீபகாலமாக பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், மோதல் தீவிரமடைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை அன்று அமெரிக்க ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ஈரானே காரணம் என குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களை நோக்கி IRGC தாக்குதல் நடத்தியிருந்தது.

இந்த மோதல் குறித்து ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தனது எக்ஸ் (X) பக்கத்தில் கவலை தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடு மேலும் ஆழமான நெருக்கடிக்குள் தள்ளப்படுவதாகவும், தற்போதைய சூழலில் போர்நிறுத்தம் என்பது பெயரளவிலேயே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனைத்துத் தரப்பினரும் இராஜதந்திர தீர்வுக்காக உழைக்க வேண்டும் என்றும், இனி தாக்குதல்களோ அல்லது அதற்கான காரணங்களோ சொல்லப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular