HomeFeatured Newsவேண்டுமென்றே விமானத்தை கட்டிடத்தில் மோதிய சீன விமானி

வேண்டுமென்றே விமானத்தை கட்டிடத்தில் மோதிய சீன விமானி

சீனத் தலைநகர் பெய்ஜிங்கின் மிக உயரமான வானளாவிய கட்டிடத்தின் (Skyscraper) மீது கடந்த வாரம் சிறிய ரக விமானத்தை மோதச் செய்த விமானி, “நீண்டகால தூக்கமின்மை மற்றும் கடுமையான மன அழுத்தத்தால்” பாதிக்கப்பட்டிருந்தார் எனவும், “தனிப்பட்ட காரணங்களுக்காகவே” அவர் இந்த செயலைச் செய்துள்ளார் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்த பயங்கர விபத்தில் விமானி உயிரிழந்ததுடன், 13 பேர் காயமடைந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய விமானி, ‘லியு’ (Liu) என்ற குடும்பப் பெயரால் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

66 வயதான லியு, பெய்ஜிங்கில் வசித்து வந்த ஒரு விவாகரத்தான, தனியாக வாழ்ந்து வந்த ஃப்ரீலான்ஸர் (Freelancer) ஆவார் என சாயோங் (Chaoyang) மாவட்ட அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரது நாட்குறிப்பை சோதித்தபோது, அதில் “தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போவதாக” பல இடங்களில் அவர் எழுதியிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

“முழுமையான விசாரணைக்குப் பிறகு, இது தனிப்பட்ட காரணங்களால் பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்ட ஒரு சம்பவம் என்ற முடிவுக்கு வரப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் தற்போது மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

இணையத்தில் தணிக்கை செய்யப்பட்ட வீடியோக்கள்:

சீனாவின் மிக முக்கியப் பாதுகாப்புக் குறைபாடாகப் பார்க்கப்பட்ட இந்த விபத்து, அங்குள்ள ‘சிஐடிஐசி டவர்’ (CITIC Tower) கட்டிடத்தில் நிகழ்ந்தது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, சீன இணையப் பக்கங்களிலிருந்து அவை உடனடியாக அதிகாரிகளால் நீக்கப்பட்டன .

109 மாடிகளைக் கொண்ட இந்த சிஐடிஐசி டவர், ‘சீனா ஜுன்’ (China Zun) என்றும் அழைக்கப்படுகிறது.

இது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான ‘ஜோங்நன்ஹாய்’ (Zhongnanhai) பகுதியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் மக்களால் அதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதப்படும் இக்கட்டிடம் விபத்துக்குள்ளானதும், அது தொடர்பான மீம்கள் மற்றும் புகைப்படங்கள் கூட சீன சமூக ஊடகங்களிலிருந்து நீக்கப்பட்டன.

விமானம் திசைமாறியது எப்படி?

இந்த விபத்தைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியா மற்றும் பிற சர்வதேச நிறுவனங்கள் உட்பட குறைந்தது மூன்று விமான நிறுவனங்கள் தங்களது இலகுரக விமானச் சேவைகளை தற்காலிகமாக நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

விபத்து நடந்த அன்று மதியம், லியு பிங்கு (Pinggu) மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து இருவர் பயணிக்கும் பயிற்சியிலும், பின்னர் தனியாகவும் விமானத்தை இயக்கியுள்ளார். தனிப்பயணத்தின் போது, அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட வான்பரப்பை விட்டு விலகி, விமான நிலையத்துடனான தொடர்பை இழந்தார். அதன் பின்னரே நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த உயரமான கட்டிடத்தின் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, லியு 2021 இல் ஸ்போர்ட்ஸ் பைலட் உரிமத்தையும், 2024 இல் பிரைவேட் பைலட் உரிமத்தையும் பெற்றுள்ளார். ‘பிளைட்ரேடார்24’ (Flightradar24) தகவலின்படி, அவர் இயக்கிய விமானம் சீன நிறுவனமான சன்வார்ட் ஏர்கிராப்ட் (Sunward Aircraft) தயாரித்த, இரு இருக்கைகள் மற்றும் ஒற்றை எஞ்சின் கொண்ட ‘அரோரா எஸ்ஏ60எல்’ (Aurora SA60L) ரகத்தைச் சேர்ந்ததாகும். 6.9 மீட்டர் நீளமும், 8.6 மீட்டர் இறக்கை அகலமும் கொண்ட இந்த விமானம், பொதுவாக வான்வழி புகைப்படம் எடுத்தல் மற்றும் பொழுதுபோக்கு பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்டதாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular