HomeFeatured Newsமஹிந்த தரப்பினர் 5 மில்லியன் டாலர் லஞ்சம் பெற்றுள்ளமை அம்பலம்!

மஹிந்த தரப்பினர் 5 மில்லியன் டாலர் லஞ்சம் பெற்றுள்ளமை அம்பலம்!

காலிமுகத்திடலில் அமைந்திருந்த இராணுவத் தலைமையகத்திற்குச் சொந்தமான காணியை ஷங்ரி-லா (Shangri-La) ஹோட்டல் குழுமத்திற்கு விற்பனை செய்தபோது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் 5 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம் பெற்றுள்ளதாக சிங்கள இணைய ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

சிங்கப்பூரின் ‘TPL Inter’ நிறுவனத்தின் உரிமையாளரான சிதம்பரம் என்பவரால், கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் திகதி பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (FCID) வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சத்தியக்கடதாசி (Affidavit) ஒன்றின் அடிப்படையில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜபக்ஷ முகாமின் மிக நெருங்கிய சகாக்களில் ஒருவராகச் செயற்பட்ட சஜின் வாஸ் குணவர்தன வழங்கிய வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த விபரங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

பெறப்பட்ட லஞ்சப் பணம், ராஜபக்ஷ குடும்பத்தின் இரு புதல்வர்களால் தங்காலை பகுதியில் உள்ள ‘தங்காலை பே’ ஹோட்டலை விலைக்கு வாங்குவதற்கும், சிஎஸ்என் ஊடக வலையமைப்பின் பணிகளுக்காகவும் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக சஜின் வாஸ் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் பணத்தை இலங்கைக்குக் கொண்டு வரும்போது, நாட்டின் பிரபல தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் ஊடாக அது நிதிச் சலவை (Money Laundering) உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் தொழிலதிபர் சிதம்பரம் வழங்கிய இந்த சத்தியக்கடதாசி, அன்றைய நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) பிரதானி ரவி வைத்யாலங்கார மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளின் முன்னிலையில் சிங்கப்பூரிலேயே வைத்து பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, ராஜபக்ஷ குடும்பத்தினரால் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு சஜின் வாஸ் குணவர்தன, லொஹான் ரத்வத்தையுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின் குரல் பதிவு ஒன்றும் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது.

இந்த லஞ்ச விவகாரம் தொடர்பில் ‘லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான பிரஜைகளின் சக்தி’ அமைப்பின் தலைவர் ஜாமுனி காமந்த துஷார, இன்றைய தினம் லஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அந்த ஊடக வெளிப்படுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular