அரசுப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை, சட்டமா அதிபரின் அடுத்தகட்ட நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்காக எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு கோட்டை நீதவான் பசான் அமரசேன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்துவிட்டதாகவும், அதுகுறித்த ஆவணங்கள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதனை உறுதிப்படுத்திய சிரேஷ்ட சட்டத்தரணி, இது குறித்து சட்டமா அதிபரின் இறுதி முடிவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அவகாசம் வேண்டி, புதிய தேதியொன்றை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
ரணில் விக்கிரமசிங்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, சர்ச்சைக்குரிய நிதியில் பாதியளவு வாகனங்களுக்காகச் செலவிடப்பட்டதாக விசாரணையாளர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், அந்த வாகனங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வழங்கப்பட்டவை எனக் கூறி, அது தொடர்பான ஆவணம் ஒன்றை அரசுத் தரப்பிடம் ஒப்படைத்தார். இது குறித்து மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான், வழக்கை செப்டம்பர் 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், அன்றைய தினம் சட்டமா அதிபரின் சட்டபூர்வ நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டார்.
கடந்த 2023ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, பிரிட்டனுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட பயணத்திற்காக 16.6 மில்லியன் ரூபாய்க்கும் அதிக அரசுப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டி, ரணில் விக்கிரமசிங்க மற்றும் சமன் ஏகநாயக்க ஆகியோரை குற்றப் புலனாய்வுத் துறையினர் சந்தேகநபர்களாகப் பெயரிட்டு இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளனர்.
