நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மிக மோசமான வன்முறைச் சம்பவங்கள் குறித்துப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மோதலில் சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் எனப் பலதரப்பட்டோர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
சிறைச்சாலையினுள் சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம் மற்றும் கப்பம் பெறுதல் போன்றவற்றில் ஈடுபடும் ஒரு குழுவினருக்கும், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத மற்றும் சிறை அதிகாரிகளுக்குத் தகவல் வழங்குவதாகச் சந்தேகிக்கப்படும் மற்றொரு குழுவினருக்கும் இடையிலேயே இந்தப் பகை ஆரம்பமாகியுள்ளது.
சிறைச்சாலையினுள் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்காகப் பல்வேறு உத்திகளைக் கையாண்ட ஒரு திறமையான அதிகாரி, கடந்த ஜூலை 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.
அந்த அதிகாரி சென்றவுடன், சிறைச்சாலையின் அதிகாரம் தங்களது கைக்கு வந்துவிட்டதாகக் கருதிய ஒரு குழுவினர், தங்களைப் பழிவாங்கியதாகச் சந்தேகிக்கப்படும் மற்றைய குழுவினர் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.
ஆரம்பத்தில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலைத் தணிக்கச் சென்ற இரண்டு சிறை அதிகாரிகள் மீது கைதிகள் மிகக் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களைக் காப்பாற்ற வந்த ஏனைய அதிகாரிகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால், அவர்கள் தங்களது உயிரைப் பாதுகாக்கத் தப்பி ஓட வேண்டியிருந்தது.
வன்முறையில் ஈடுபட்ட கைதிகள் சிறைச்சாலையின் உட்புற இரும்பு வாயில்களை உடைத்துக்கொண்டு, வெளிப்புற மரக் கதவு வரை முன்னேறியுள்ளனர். சுமார் 2,500 கைதிகள் இவ்வாறு சிறையை உடைத்துக்கொண்டு பொதுமக்களின் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்கவே அரசாங்கம் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலைகளில் நிலவும் கடுமையான இடநெருக்கடி மற்றும் உத்தியோகத்தர் பற்றாக்குறை இவ்வாறான கலவரங்களுக்கு வழிவகுப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஒரு பணி நேரத்திற்கு (Shift) சுமார் 40 அதிகாரிகள் மட்டுமே பணியில் இருக்கும் நிலையில், அங்கு 2,500-க்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தது நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கலவரத்தினால் சிறைச்சாலையின் மருந்தகம், சிற்றுண்டிச்சாலை மற்றும் கூரைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகள் பாரியளவில் சேதமடைந்துள்ளன.
இந்தச் சம்பவத்திற்குத் தனது அமைச்சின் கீழ் உள்ள நிறுவனம் என்ற ரீதியில் தான் பொறுப்பேற்பதாக அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றினால் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விபரங்கள் செய்தியாக்கப்பட்டுள்ளன.
