ஈரான் மீதான திட்டமிடப்பட்ட இராணுவத் தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், தாம் அமெரிக்காவிடம் எந்தவொரு கோரிக்கையும் விடுக்கவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதன் காரணமாகவே தாக்குதல்கள் கைவிடப்பட்டதாக டிரம்ப் கூறியிருந்தார்.
ஒரு ஒப்பந்தத்திற்கான அடிப்படை எல்லைகள் ஒப்புக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, தாக்குதலை ஒத்திவைக்குமாறு ஈரான் மற்றும் இதர மத்திய கிழக்கு நாடுகள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் தெரிவித்திருந்தார்.
டிரம்ப்பின் இந்த அறிவிப்புக்கு ஈரானிய ஊடகங்கள் எள்ளிநகையாடும் வகையில் பதிலளித்து வருகின்றன. தாக்குதலை நிறுத்துமாறு அமெரிக்காவிடம் ஈரான் கோரிக்கை விடுத்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் எவ்வித தகவலையும் வெளியிடவில்லை; மாறாக, டிரம்ப் தனது அச்சுறுத்தலில் இருந்து பின்வாங்கிவிட்டார் என்றே அவை செய்தி வெளியிட்டுள்ளன.
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அதிபர் டிரம்ப்பைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினார்.
அப்போது, மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிக்குமாறு அவர் வலியுறுத்தியதாக சவூதி அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான தாக்குதல் திட்டங்கள் குறித்து சவூதி இளவரசர் தனது கவலையை வெளிப்படுத்தியதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
டிரம்ப்பின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை வரை ஈரான் அல்லது அமெரிக்கத் தரப்பிலிருந்து புதிய தாக்குதல்கள் எதுவும் பதிவாகவில்லை. கடந்த சில நாட்களாகவே இப்பகுதியில் தாக்குதல்களின் வீரியம் ஒப்பீட்டளவில் தணிந்துள்ளது.
அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்குத் தொடர்ச்சியாகச் சவால் விடுத்து வந்தாலும், கடந்த ஐந்து மாத கால மோதலால் நாட்டில் கடுமையான பொருளாதார மற்றும் சமூகச் சிக்கல்கள் உருவாகியுள்ளதை ஈரானிய அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
மோதல் தொடங்கியதில் இருந்து ஈரானில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதுடன், அதன் நாணயத்தின் மதிப்பும் வரலாற்றுச் சரிவைச் சந்தித்துள்ளது.
