ஜெர்மனியின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு சிறிய நகரில் இன்று நடத்தப்பட்ட பயங்கர துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக, துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஹம்பர்க் துறைமுக நகருக்கு அருகே உள்ள ‘ஸ்டேட்‘ என்ற நகரில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
துப்பாக்கிச்சூட்டிற்கான துல்லியமான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று காவல்துறை ஊடகத் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சுமார் 50,000 மக்கள் தொகை கொண்ட ஸ்டேட் நகரில் உள்ள ஒரு ‘இளைஞர் நல மையத்தில்‘ இந்த துப்பாக்கிச்சூடு நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் கருதுகின்றனர்.
துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த 5 பேரும் பெரியவர்கள் (Adults) என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விபரீத சம்பவத்தில் மேலும் எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்ற விவரங்கள் இன்னும் துல்லியமாக வெளியிடப்படவில்லை.
இச்சம்பவத்தை அடுத்து, அப்பகுதி பொதுமக்கள் யாரும் சம்பவ இடத்திற்கு அருகே வரவேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
மேலும், தப்பியோடிய வேறு சந்தேக நபர்கள் யாரும் வெளியில் இல்லை என்றும், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டாவது நபரின் பின்னணி மற்றும் இந்த குற்றத்தில் அவரது பங்கு என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் ஜெர்மனியில் இது போன்ற பெருந்திரள் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் மிகவும் அரிதாகவே நடக்கும் என்றாலும், அண்மைய ஆண்டுகளில் சில அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
தற்போதைய துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஜெர்மனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
