HomeFeatured Newsஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர் ட்ரம்பின் சொத்து மதிப்பு பன்மடங்கு உயர்வு

ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர் ட்ரம்பின் சொத்து மதிப்பு பன்மடங்கு உயர்வு

டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி ஏற்றதன் பின்னர், அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு வரலாறு காணாத வகையில் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக, அமெரிக்க அரசாங்க நெறிமுறைகள் அலுவலகம் (OGE) வெளியிட்டுள்ள புதிய ஆண்டு நிதி அறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.

 குறிப்பாக புளோரிடாவில் உள்ள அவரது இரு முன்னணி சொகுசு விடுதிகளின் வருமானமும், புதிய கிரிப்டோகரன்சி வணிகமும் இந்த அசுர வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளன.

ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னர் ட்ரம்பின் தனிப்பட்ட வணிகமும், அவரது அரசியல் அதிகாரமும் எவ்வாறு ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ளன என்பதை இந்த நிதி விவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஜனாதிபதி ட்ரம்ப் தனது சொந்த விடுதிகளான மார்-ஏ-லாகோ (Mar-a-Lago) மற்றும் ட்ரம்ப் நேஷனல் டோரால்க்கு (Trump National Doral) 24க்கும் மேற்பட்ட முறை விஜயம் செய்துள்ளார்.

ஜனாதிபதியை நேரடியாகச் சந்திக்கும் நோக்கில் மில்லியன் டாலர்கள் மதிப்பிலான நிதி திரட்டும் விருந்துகள், வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கான உபசரிப்புகள் மற்றும் குடியரசுக் கட்சியின் (GOP) பிரம்மாண்ட விழாக்கள் அங்கு நடைபெற்றுள்ளன.

ஜனாதிபதியாக மீண்டும் பொறுப்பேற்ற பின்னர் இந்த விடுதியின் மூலம் ட்ரம்பிற்கு சுமார் 77.5 மில்லியன் டாலர் வருமானம் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 50% கூடுதலாகும், அத்துடன் 2020 ஆம் ஆண்டு இதே விடுதியிலிருந்து அவர் ஈட்டிய வருமானத்தை விட மூன்று மடங்காகும்.

ஜனாதிபதி தேர்தலுக்கு சற்று முன்பு, மார்-ஏ-லாகோ விடுதியின் ஆரம்ப உறுப்பினர் கட்டணத்தை 1 மில்லியன் டாலராக ட்ரம்பின் நிர்வாகம் உயர்த்தியது. ஜனாதிபதிக்கு நெருக்கமாக இருக்க விரும்பும் தொழிலதிபர்கள் பலரும் இக்கட்டணத்தைச் செலுத்தி இணைந்துள்ளனர்.

“மக்கள் ஜனாதிபதி ட்ரம்பிற்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மார்-ஏ-லாகோவிற்குச் செல்கிறார்கள். ஜனாதிபதியின் காதில் விழும் ஒரு சிறு ரகசியம், அவர்கள் உள்ளே நுழைவதற்குக் கொடுக்கும் தொகையை விட அதிக மதிப்புடையது” என்று நுகர்வோர் உரிமைகள் ஆலோசனை அமைப்பான ‘பப்ளிக் சிட்டிசன்’ அமைப்பின் இணைத் தலைவர் ராபர்ட் வைஸ்மேன் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையின் ஊடகப் பேச்சாளர் அன்னா கெல்லி இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். ஜனாதிபதியோ அவரது குடும்பத்தினரோ எவ்வித சுயநல முரண்பாடுகளிலும் ஈடுபடவில்லை என்றும், ட்ரம்பின் அனைத்து நடவடிக்கைகளும் அமெரிக்க மக்களின் நலனுக்காகவே எடுக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்பின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு அதிகரிப்பில் அவரது பாரம்பரிய கோல்ஃப் மைதானங்கள் மற்றும் விடுதிகளை விடவும், புதிதாக அவர் ஆரம்பித்துள்ள கிரிப்டோகரன்சி வணிகமே தற்போது பிரதான இடத்தை வகிக்கிறது.

ஜனாதிபதி ட்ரம்பின் மகன்களால் இணைந்து தொடங்கப்பட்ட ‘வேர்ல்ட் லிபர்ட்டி பைனான்சியல்’ (World Liberty Financial) நிறுவனம் மற்றும் ‘$TRUMP’ மீம்காயின் (Memecoin) போன்ற புதிய கிரிப்டோ முயற்சிகள் மூலம் கடந்த ஆண்டில் மட்டும் 1.4 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளது.

இது ட்ரம்பின் கோல்ஃப் மைதானங்கள், ஹோட்டல்கள் மற்றும் சொகுசு விடுதிகள் அனைத்திலிருந்தும் கிடைத்த மொத்த வருமானத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்.

இதற்கு மேலதிகமாக, வியட்நாம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு ‘ட்ரம்பின்’ பெயரைப் பயன்படுத்துவதற்கான உரிம ஒப்பந்தங்கள் (Licensing deals) மூலம் சுமார் 60 மில்லியன் டாலர் வருமானமும் கிடைத்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular