இலங்கையின் விமானப் போக்குவரத்து துறையில் பாரிய உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதியமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
ஜூலை 1 ஆம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக இணைக்கப்பட்ட 100 விமானப் பாதுகாப்பு அதிகாரிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பில் உரையாற்றிய அவர், நாட்டின் விமானப் போக்குவரத்து துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க பல அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.
அதன் ஒரு பகுதியாக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் முதலாம் பயணிகள் முனையத்தை அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 15 பில்லியன் ரூபா முதலீட்டில் முழுமையாக நவீனமயப்படுத்தும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், நீண்டகாலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இரண்டாவது பயணிகள் முனையத்தின் (Terminal 2) கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் மீண்டும் தொடங்கப்படும் என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்தின் மூலம் விமான நிலையத்தின் பயணிகள் சேவைத் திறன் மேலும் அதிகரிக்கப்படுவதுடன், இலங்கையை பிராந்திய விமானப் போக்குவரத்து மையமாக வலுப்படுத்தும் நோக்கமும் அரசாங்கத்துக்கு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்தப் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னேறுவதன் மூலம் எதிர்வரும் ஆண்டுகளில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விரிவான அபிவிருத்திப் பணிகளின் மையமாக மாறும் என்றும் அவர் தெரிவித்தார்.
இத்திட்டங்களுக்கான முதலீடுகள், இலங்கையின் விமானப் போக்குவரத்து துறையை நவீனமயப்படுத்துவதோடு, நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலாத்துறை முன்னேற்ற இலக்குகளையும் ஆதரிக்கும் வகையில் அமையும் என பிரதியமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு தெரிவித்தார்.
