மனிதக் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் அபாயம் இருப்பதால், அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களின் வளர்ச்சியைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கோ அல்லது மெதுவாக்குவதற்கோ அனைத்து முன்னணி AI நிறுவனங்களும் ஒன்றிணைந்து ஒரு கூட்டு உடன்படிக்கைக்கு வர வேண்டும் என ‘Anthropic’ நிறுவனம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
பிரபல ‘Claude’ சாட்பாட்டை (Chatbot) உருவாக்கிய Anthropic நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய வலைப்பதிவொன்றில், அதிநவீன AI அமைப்புகள் மனிதர்களை விட அதிவேகமாகவும் துல்லியமாகவும் சிக்கலான பணிகளைச் செய்யும் திறனைப் பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
எனவே, இதன் அடுத்தகட்ட வளர்ச்சியைத் தற்காலிகமாக முடக்குவதற்கான (Pause) ஒரு வாய்ப்பு உலகிற்கு இருப்பது நல்லது என அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியின்படி, எதிர்கால AI அமைப்புகள் தாங்களாகவே குறியீடுகளை (Coding) எழுதி, தங்களை விடவும் அதிநவீனமான புதிய பதிப்புகளை (Improved versions) உருவாக்கிக்கொள்ளும் திறனைப் பெற்றுவிடும் என்று Anthropic சுட்டிக்காட்டியுள்ளது.
இதனை “சுய–மேம்பாடு” (Recursive Self-Improvement) என்று ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். இத்தகைய வளர்ச்சி அறிவியல் மற்றும் மருத்துவத் துறைக்கு பெரும் நன்மைகளைத் தந்தாலும், ஒரு கட்டத்தில் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாகச் செயல்படும் ஆபத்தை இது அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Anthropic நிறுவனத்தின் இந்த முன்மொழிவு AI துறையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதன் போட்டி நிறுவனமான ‘OpenAI’ இதற்கு மாற்றுக்கருத்து தெரிவித்துள்ளது. தனியார் நிறுவனங்கள் மட்டுமே AI இன் வேகத்தைத் தீர்மானிக்கக் கூடாது என்றும், இதற்கான விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை ஜனநாயக அரசாங்கங்களே வகுக்க வேண்டும் என்றும் OpenAI தனது அறிக்கையில் கூறியுள்ளது.
அண்மையில் டொராண்டோ பல்கலைக்கழக (University of Toronto) ஆராய்ச்சியாளர்கள், கணினி அமைப்புகளில் பரவி, தனது ஹேக்கிங் உத்திகளைத் தானே மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய ஒரு சுய–பரப்பல் மென்பொருளை AI மூலம் உருவாக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர்.
இது போன்ற திறந்த மூல (Open-source) கருவிகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால், உலகளாவிய ரீதியில் பெரிய அளவிலான சைபர் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என முதன்மை ஆய்வாளர் நிக்கோலஸ் பாப்பர்னோட் எச்சரித்துள்ளார்.
ஒரு நிறுவனம் மட்டும் வளர்ச்சியை நிறுத்தினால், மற்ற நிறுவனங்கள் தீவிரமாக முன்னேறிச் சென்று தவறான பாதையில் லாபம் ஈட்ட முயலும் என்பதால், இதற்கு ஒரு சர்வதேசக் கூட்டு கட்டமைப்பு (Coordinated global framework) அவசியம் என்று Anthropic வலியுறுத்தியுள்ளது.
ஏற்கனவே 2023 ஆம் ஆண்டில் எலோன் மஸ்க் (Elon Musk) உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் AI பயிற்சிக்கு 6 மாத காலத் தடையைக் கோரியிருந்த போதிலும், அது நடைமுறைக்கு வரவில்லை. தற்போது அமெரிக்க அரசாங்கம் புதிய உத்தரவுகள் மூலம் AI அமைப்புகளைப் பொதுவெளியில் விடுவதற்கு முன் சைபர் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்துமாறு கோரியுள்ளது.
இருப்பினும், பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புடன் பங்குச்சந்தையில் நுழையத் தயாராகி வரும் Anthropic மற்றும் OpenAI போன்ற நிறுவனங்களுக்கு இடையே, பாதுகாப்பைக் கையாள்வதில் உள்ள இத்தகைய முரண்பாடுகள் உலகளவில் பேசுபொருளாக மாறியுள்ளன.
