சுவிட்சர்லாந்தின் மேற்குப் பகுதியில் போலி பொலிஸ் அதிகாரிகள் என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி வரும் சர்வதேச குற்றக் குழுக்களுக்கு எதிராக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் பாரிய கூட்டு நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
பிரான்ஸை தளமாகக் கொண்டு இயங்கும் இந்த மோசடி வலைப்பின்னல்களால், கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்தில் மட்டும் 5,000 க்கும் மேற்பட்ட மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், 18 மில்லியன் சுவிஸ் பிராங்க் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடிகளின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளையும், அதற்கு உடந்தையாக இருப்பவர்களையும் கண்டறிந்து ஒடுக்குவதற்காக பிரெஞ்சு மொழி பேசும் சுவிஸ் பிராந்தியங்களான ஃபிரிபோர்க் (Fribourg), ஜெனிவா (Geneva), ஜூரா (Jura), நேவ்சாடெல் (Neuchâtel), வாட் (Vaud) மற்றும் வாலே (Valais) ஆகிய மாகாணங்களின் பொலிஸ் படைகளும், சுவிஸ் மத்திய பொலிஸ் பிரிவும் (fedpol) கைகோர்த்துள்ளன.
விசாரணைகளின்படி, இந்த மோசடிகள் பிரான்ஸிலிருந்து இயங்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் வேலை என்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளுடனான எல்லை கடந்த கூட்டு ஒத்துழைப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விசேட கூட்டு நடவடிக்கைக்கு தலைமை தாங்கும் நேவ்சாடெல் மாகாண நீதித்துறை பொலிஸ் தளபதி சைமன் பெச்லர் கூறுகையில், “இது உண்மையிலேயே மிகவும் பாரிய அளவிலான ஒரு மோசடிப் பின்னணியாகும். கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் இதன் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், தற்போது மீண்டும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. வழக்குகளின் எண்ணிக்கையும் தீவிரத்தன்மையும் கூடி வருவதால், இதற்கு மாகாணங்களுக்கு இடையிலான கூட்டு நடவடிக்கை மூலம் ஒரு அசாதாரண பதிலை வழங்க வேண்டியுள்ளது” என்றார்.
சுவிட்சர்லாந்தில் கொள்ளையடித்த பணத்தைச் சேகரிப்பதற்காக, இந்த குற்றக் குழுக்கள் “கூரியர்கள்” எனப்படும் இடைத்தரகர்களைப் பயன்படுத்துகின்றன. இவர்கள் பெரும்பாலும் பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இளம் பருவத்தினராவர். சமூக ஊடகங்கள் மூலம் “எளிதாகவும் விரைவாகவும் பணம் சம்பாதிக்கலாம்” என ஆசைவார்த்தை கூறி இவர்கள் ஈர்க்கப்படுகின்றனர்.
ஆனால், இந்த இளைஞர்கள் வெறும் பகடைக்காய்களாகவே பயன்படுத்தப்படுகின்றனர் என மாகாண அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டதை விட மிகக் குறைந்த பணமே வழங்கப்படுகிறது.
அத்துடன், அவர்களது தனிப்பட்ட விபரங்களை குற்றவாளிகள் வலுக்கட்டாயமாகப் பெற்றுக்கொள்வதுடன், அவர்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாவிடின் வன்முறை மூலம் மிரட்டப்படுவதோ அல்லது மோசடிக் குழுக்களாலேயே பொலிஸாருக்குக் காட்டிக்கொடுக்கப்படுவதோ நடக்கிறது.
பாதிக்கப்படக்கூடிய பலவீனமான முதியவர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் இந்த மோசடிகளுக்கு, இந்த இளம் கூரியர்களே முதன்மைப் பொறுப்பாளிகள் என்பதால் அவர்கள் கடுமையான சட்ட விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சுவிஸ் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
மோசடியில் ஈடுபடுவோர் எளிதில் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவதால், இத்தகைய போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், “எளிதான பணம்” என்ற மாயையில் விழ வேண்டாம் என்றும் இளைஞர்களுக்கு பொலிஸார் அவசர விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
