உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டை கொண்ட நாடுகளின் வரிசையில் சிங்கப்பூர் முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.
2006 ஆம் ஆண்டில், அமெரிக்க கடவுச்சீட்டு உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்பட்டது. டென்மார்க் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுடன் இணைந்து முதலிடத்தைப் பிடித்திருந்த அமெரிக்க கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு விசா இன்றிப் பயணிக்க முடிந்தது.
ஆனால், 20 ஆண்டுகள் கழித்து ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ் வெளியிட்டுள்ள அதன் 20-வது ஆண்டு நிறைவு அறிக்கையில், உலகளாவிய பயணச் சுதந்திரத்தின் தரவரிசை முற்றிலும் மாறியுள்ளது.
உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டாகச் சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் உலகின் 192 நாடுகளுக்கு விசா இன்றிப் பயணிக்க முடியும்.
இந்த அட்டவணையில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது UAE. 20 ஆண்டுகளில் 153 புதிய நாடுகளுக்கு விசா இல்லா அனுமதி பெற்று, ஜப்பான் மற்றும் தென் கொரியாவுடன் இணைந்து 2-வது இடத்தை (188 நாடுகள்) பிடித்து சாதனை படைத்துள்ளது.
அமெரிக்கா தற்போது 10-வது இடத்தில் உள்ளது. ஹென்லி ஒரே தரவரிசைப் புள்ளியில் பல நாடுகளைச் சேர்ப்பதால், நடைமுறையில் அமெரிக்காவிற்கு முன்பாக 36 நாடுகள் உள்ளன.
இருப்பினும், 2006-இல் 130 நாடுகளுக்கு மட்டுமே விசா இன்றிப் பயணிக்க முடிந்த அமெரிக்கர்களுக்கு, தற்போது 180 நாடுகளுக்கு அனுமதி கிடைக்கிறது. ஆனால் பிற நாடுகள் அடைந்த அதிவேக வளர்ச்சியால் அமெரிக்காவின் தரவரிசை பின் தங்கியுள்ளது.
ஒரு நாட்டின் கடவுச்சீட்டின் சக்தி என்பது அந்நாட்டின் புவிசார் அரசியல் மூலதனத்தின் வெளிப்பாடாகும். வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பிற்காக மற்ற நாடுகள் எந்தளவுக்கு ஒரு நாட்டைத் தங்களது கூட்டாளியாக விரும்புகின்றன என்பதை இது காட்டுகிறது.
இந்த வரிசையில் சுவிட்சர்லாந்து, ஒஸ்ட்ரியா, கிரேக்கம், மால்டா மற்றும் போர்த்துகல் ஆகிய நாடுகள் ஐந்தாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் தொடர்ந்து பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உள்ள சிங்கப்பூருக்கும் (192) கடைசி இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தானுக்கும் (22) இடையே 170 நாடுகளுக்கான மிகப்பெரிய இடைவெளி உள்ளது.
