அமெரிக்கா தனது வான்வழித் தாக்குதல்களை நிறுத்தும் வரை தானும் தாக்குதல்களை நிறுத்திவைப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்கா தனது குண்டுவீச்சைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதைத் தொடர்ந்து இந்த முக்கிய முடிவு வெளியாகியுள்ளது.
ஈரான் மீதான 13 நாட்கள் தொடர் தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ராணுவ ஆலோசகர்கள் அவரிடம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்தனர்.
ஈரானில் தாக்குதல் நடத்துவதற்கான இலக்குகள் தீர்ந்துவிட்டன.
தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் அமெரிக்காவின் ஆயுதக் கிடங்கு மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணை இருப்புகள் காலியாகிவிடும்.
இதன் காரணமாகப் பென்டகன் தனது தாக்குதல்களைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
அமெரிக்கா தாக்குதலை நிறுத்தினால், ஈரானும் தனது நடவடிக்கைகளை நிறுத்தும். ‘தாக்குதலுக்குத் தாக்குதல்‘ என்பதே எங்களது கொள்கை. இந்த செய்தி அமெரிக்காவிற்கு ஏற்கனவே முறைப்படி தெரிவிக்கப்பட்டுவிட்டது.
எனினும், அமெரிக்காவின் இந்தத் தற்காலிக நிறுத்தம் ஒரு தந்திரோபாய நடவடிக்கையே தவிர, அமெரிக்காவின் ராஜதந்திர நிலைப்பாட்டில் ஏற்பட்ட உண்மையான மாற்றம் அல்ல என்று ஈரான் சந்தேகிக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர் மைக் வால்ட்ஸ் கருத்து தெரிவிக்கையில், ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்குச் சிறிது அவகாசம் மற்றும் இடைவெளி அளிக்கும் நோக்கில் ஜனாதிபதி டிரம்ப் இந்தத் தாக்குதல் நிறுத்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் ஏற்படுத்திய அச்சுறுத்தல்களுக்குப் பதிலடியாகவே அமெரிக்கா இத்தாக்குதல்களை நடத்தி வந்தது. தற்போது இரு நாடுகளும் தற்காலிகமாகப் பின்வாங்கியுள்ளதால் போர்ச் சூழல் சற்றுத் தணிந்துள்ளது.
