சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் இடிமின்னலுடன் மழை பெய்த போதிலும், வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அது பெரிய ஆறுதலைத் தரவில்லை.
இந்நிலையிலும், அடுத்த வார நடுப்பகுதியில் இருந்து மீண்டும் ஒரு கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என அந்நாட்டின் கூட்டாட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஜூலை 23 முதல் சுவிட்சர்லாந்தில் “டாக் டேஸ்” (Dog Days – கோடையின் உச்சக்கட்ட வெப்ப நாட்கள்) என அழைக்கப்படும் காலம் தொடங்கியுள்ளது.
கேனிஸ் மேஜர் நட்சத்திரக் கூட்டத்தின் பெயரால் அழைக்கப்படும் இந்த வெப்பக் காலம் வழக்கமாக ஆகஸ்ட் 23 வரை நீடிக்கும் என சுவிஸ் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரவிருக்கும் புதன்கிழமை முதல் சுவிட்சர்லாந்தின் மேற்கு மற்றும் ஜெர்மன் மொழி பேசும் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 37 பாகை செல்சியஸ் வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல உயர் அழுத்த மண்டலம் மற்றும் துணை மண்டல வெப்பக் காற்று காரணமாக இந்த வெப்ப அலை மீண்டும் உருவாகிறது.
சுவிஸ் கூட்டாட்சி சுற்றுச்சூழல் அலுவலகத்தின் தகவல்படி, இடியுடன் கூடிய மழை பெய்த போதிலும் வறட்சியின் தீவிரத்தன்மை தணிய வாய்ப்பில்லை. நாடு முழுவதும் தொடர்ச்சியான மழைக்கான அறிகுறிகள் எதுவுமில்லை.
ஜூரா முதல் பாஸல் பகுதி வரையிலான நிலப்பரப்பில் கடந்த 30 நாட்களில் வழக்கமான மழையளவை விட 70% வரை குறைவாகவே மழை பதிவாகியுள்ளது. .
இதன் காரணமாக கான்ஸ்டன்ஸ், வாலென், லூசர்ன், சூரிச் மற்றும் மெஜோரே ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் மிகக் வேகமாகச் சரிந்து வருகிறது. இதில் மெஜோரே ஏரியின் நீர்மட்டம் ஜூன் பாதியில் இருந்து 1 மீட்டருக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாம் பாதியிலும் குறிப்பிடத்தக்க அளவு மழை பொழிய வாய்ப்பில்லை என்பதால், வறட்சி நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
