அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், ஒப்பந்தத்திற்கு எவ்வித காலக்கெடுவையும் நிர்ணயிக்க அவர் மறுத்துவிட்டார்.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும், டெஹ்ரானின் அணுசக்தி விவகாரத்தில் எழுந்துள்ள முட்டுக்கட்டைக்குத் தீர்வு காணவும் விரைவில் ஒப்பந்தம் எட்டப்படும் என்ற நம்பிக்கையில், ஈரான் மீதான உடனடித் தாக்குதலை தாம் ஒத்திவைத்துள்ளதாக அவர் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.
ஈரான் மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகள் தங்களுக்கு அவகாசம் அளிக்குமாறு கோரியதாகவும், இதன் மூலம் ஹோர்முஸ் நீரிணை உடனடியாகவும் முழுமையாகவும் திறக்கப்படும் எனவும், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்‘ தளத்தில் தெரிவித்துள்ளார்.
நியூஜெர்சியிலிருந்து வாஷிங்டன் திரும்பிய டிரம்ப், செய்தியாளர்களிடம் கூறுகையில், திங்கட்கிழமை பிற்பகலில் பேச்சுவார்த்தை ஆரம்மாகும் என தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தப் பேச்சுவார்த்தை எங்கு நடைபெறும், யார் யார் பங்கேற்பார்கள் என்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.
ஒப்பந்தத்திற்கு காலக்கெடு உள்ளதா என்ற கேள்விக்கு, “மக்களின் உயிரைப் பறிப்பதை நான் விரும்பவில்லை; இதில் ஏராளமானோர் உயிரிழக்க நேரிடும், அதை நாங்கள் விரும்பவில்லை” என்று டிரம்ப் பதிலளித்தார்.
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனிர் ஆகியோருடன் தொலைபேசியில் ஆலோசனையில் ஈடுபட்டார்.
மேலும், ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ஓமனுடன் ஈரான் நடத்தி வரும் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து விளக்கிய ஈரான் வெளியுறவு அமைச்சு செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய், நீரிணை வழியாக புதிய கடல் பாதையை அமைப்பது குறித்தே பேச்சுவார்த்தை நடப்பதாகவும், இது ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது அல்லது மூடுவது தொடர்பான தனி விவாதத்துடன் தொடர்புடையது அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
பிராந்தியத்தில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நெருங்கிய பாதுகாப்பு ஒத்துழைப்பு நிலவுவதாக இஸ்ரேல் சக்திவளத் துறை அமைச்சர் எலி கோஹன் தெரிவித்தார்.
எனினும் “ஒப்பந்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஈரான் தனது அணுசக்தி திட்டத்தையோ அல்லது பாலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தியையோ புதுப்பிக்க முயன்றால், நாங்கள் கண்டிப்பாகத் தாக்குதல் நடத்துவோம்” என்று இஸ்ரேல் திட்டவட்டமாக எச்சரித்துள்ளது.
