சுவிட்சர்லாந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம்தியை தனது தேசிய தினமாகக் கொண்டாடுகிறது. கொடியேற்றம், உரைகள், பாரம்பரிய உணவு வகைகள் என நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்படும் இத்தினத்தில் சுவாரசியமான பல வரலாற்றுப் பின்னணிகளும் நவீன சர்ச்சைகளும் நிறைந்துள்ளன.
சுவிட்சர்லாந்தின் உண்மையான கூட்டாட்சி அரசியல் சாசனம் 1848 செப்டம்பர் 12 அன்று தான் உருவாக்கப்பட்டது.
எனினும், 1291 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 அன்று ‘ரூட்லி’ (Rütli) என்ற இடத்தில் கூட்டாட்சி உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதாகக் கருதப்படும் வரலாற்று ஐதீகத்தின் அடிப்படையில், 1891 முதல் ஆகஸ்ட் 1 தேசிய தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மலைப் பகுதிகளில் தீ மூட்டி வெளிச்சம் எழுப்பும் வழக்கம், 15 ஆம் நூற்றாண்டில் எதிரிகளின் வருகையை எச்சரிக்க பயன்பட்ட சிக்சல் கோபுரங்களின் நினைவாகத் தொடங்கியது. இன்று அது நாட்டின் அமைதியையும் அழகையும் வெளிப்படுத்தும் அடையாளமாக மாறியுள்ளது.
தேசிய தினத்தின் போது வெடிக்கப்படும் பட்டாசுகள் தற்போது நாட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
பெரும்பாலான மக்கள் பட்டாசுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன், அதற்குத் தடை விதிக்கக் கோரி மக்கள் இயக்கங்கள் மூலம் அழுத்தமும் கொடுத்து வருகின்றனர். பல பகுதிகளில் ஏற்கனவே பட்டாசுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 1 அன்று நாடு முழுவதும் விடுமுறை அளிக்கும் முறை 1993 ஆம் ஆண்டின் மக்கள் வாக்கெடுப்புக்குப் பிறகே அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது.
கிராமப்புறப் பண்ணைகளில் பாரம்பரிய சுவிஸ் ரொட்டி ‘வெகே’ மற்றும் உள்ளூர் உணவுகளுடன் காலை உணவு விருந்துகள் வழங்கப்படுகின்றன.
இராணுவ அணிவகுப்புகள் எதுவும் இல்லாமல், அரசின் 7 அமைச்சர்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களிடையே உரையாற்றுகின்றனர்.
லூசர்ன் நகரில் பகல் நேர ‘டெக்னோ’ இசை நிகழ்ச்சிகள், ஆல்ட்ஸ்டேட்டனில் இடைக்கால வரலாற்று மறுஉருவாக்கம், மற்றும் சூரிச் நகரில் சர்வதேச உணவுத் திருவிழாக்கள் என சுவிஸ் தேசிய தினம் புதிய பரிமாணங்களையும் பெற்று வருகிறது.
