அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஈரானுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அந்நாட்டின் மீது மீண்டும் தீவிர ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் டிரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் தற்போது ஈரானுடன் மிகவும் தீவிரமான மற்றும் ஆழ்ந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். ஒருவேளை இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியாவிட்டால், நாங்கள் மீண்டும் ஈரானுக்கு எதிராகக் கடுமையான ராணுவ நடவடிக்கையைத் தொடங்குவோம்” என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர மத்தியஸ்தர்களாகச் செயல்படும் நாடுகளின் வேண்டுகோளினாலேயே கடந்த வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்ட தாக்குதல்களை நிறுத்தி வைத்ததாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அனைத்து மத்தியஸ்தர்களும் என்னிடம் ‘தாக்குதல் நடத்த வேண்டாம்’ எனக் கேட்டுக்கொண்டனர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு எவ்வளவு காலம் அவகாசம் அளிக்கப்படும் என்று கேட்கப்பட்டதற்கு, “அதிக காலம் இல்லை. ஒன்று அனைத்தும் மிக விரைவாக நடக்க வேண்டும், இல்லையெனில் எதுவுமே நடக்காது” எனத் திட்டவட்டமாக டிரம்ப் பதிலளித்துள்ளார்.
