ஈரானுடனான போரினால் அமெரிக்காவிற்கு இதுவரை சுமார் 37.5 பில்லியன் டொலர் செலவாகியுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் மதிப்பிடப்பட்ட தொகையை விட இது சுமார் 8 பில்லியன் டாலர் அதிகமாகும்.
அமெரிக்க செனட் சபையின் நிதியீட்டுக் குழுவின் விசாரணையின் போது ஹெக்செத் இதனைத் தெரிவித்தார்.
மேலும், பென்டகனுக்காகக் காங்கிரஸிடம் கூடுதலாகக் கேட்கப்பட்டுள்ள $87 பில்லியன் நிதியை அவசரமாக ஒப்புவிக்க வேண்டும் என்றும், அதில் $67 பில்லியன் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடைபெறும் இராணுவ நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த விசாரணைக் கூட்டத்தில் போர் எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் தொடர்ந்து இடையூறு விளைவித்தனர். மேலும், பாதுகாப்புச் செயலருக்கும் செனட்டர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது.
கடந்த வாரம் அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்ததைத் தொடர்ந்தும், அப்பகுதியில் மூன்று அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததை உறுதிப்படுத்திய பின்னரும், காபிட்டல் ஹில்லில் ஹெக்செத் ஆஜராவது இதுவே முதல்முறையாகும்.
முன்னதாக, வரும் நிதியாண்டில் பென்டகனுக்கு $1.5 டிரில்லியன் நிதி ஒதுக்கக் கோரி வெள்ளை மாளிகை காங்கிரஸிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இது நிறைவேறினால், அமெரிக்க நவீன வரலாற்றிலேயே மிக உயர்ந்த இராணுவச் செலவினமாக இது அமையும்.
நாம் ஆபத்தான உலக சூழலில் வாழ்கிறோம். அதற்குத் துணிச்சலான மற்றும் விரைவான நடவடிக்கைகள் தேவை. கூடுதல் நிதி கிடைக்கவில்லை என்றால், வீரர்களுக்கான ஊதியம், தளவாடங்களை மீண்டும் நிரப்புதல் மற்றும் முக்கிய இராணுவ நடவடிக்கைகளைத் தடையின்றித் தொடர்வதில் பெரும் பற்றாக்குறை ஏற்படும்.”
ஜனநாயகக் கட்சிச் செனட்டர் கிர்ஸ்டன் கில்லிபிராண்ட், சாதாரண அமெரிக்க மக்கள் தங்கள் குடும்பத்திற்கு உணவளிக்க சிரமப்படும்போது, ஏற்கனவே வென்றுவிட்டதாகக் கூறப்படும் போருக்காக அரசாங்கம் பில்லியன் கணக்கில் நிதி கேட்பதைச் சுட்டிக்காட்டி விமர்சித்தார்.
சேதமடைந்த அமெரிக்க இராணுவத் தளங்களை மீண்டும் சீரமைக்கும் கட்டுமானச் செலவுகள் இந்த $37.5 பில்லியன் கணக்கில் சேர்க்கப்படவில்லை என்பதால், போரின் உண்மையான செலவு இதைவிட மிகவும் அதிகமாக இருக்கும் என்று ஜனநாயகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்தப் போரில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், உயிரிழந்த வீரர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தத் தயார் நிலையில் உள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் வியாழக்கிழமையுடன் விடுமுறையில் செல்லவுள்ளதால், இந்த நிதி உதவிக்கான ஒப்புதல் கிடைப்பதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
