இலங்கையில் பிறந்து வளர்ந்த தமிழரான பேராசிரியர் நிஷான் கனகராஜா, பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ல்ஸால் (King Charles III) உயரிய “நைட்ஹுட்” (Knighthood) கௌரவ பட்டத்தினால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
கல்வித் துறையில் ஆற்றிய சிறப்பான சேவைக்காக இந்த உயரிய கௌரவம் வழஙக்ப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழா நேற்றைய தினம் பிரித்தானியாவின் விண்ட்சர் கோட்டையில் நடைபெற்றது.
பாரம்பரிய நடைமுறையின்படி, மன்னர் சார்ல்ஸ் தனது வாளால் முழங்காலிட்டு அமர்ந்திருந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவின் இரு தோள்களையும் தொட்டு, அதிகாரப்பூர்வமாக “சேர்” பட்டத்தை வழங்கினார்.
இந்த கௌரவம், 2026ஆம் ஆண்டுக்கான மன்னரின் புத்தாண்டு கௌரவப் பட்டியல் (King’s New Year Honours) மூலம் அறிவிக்கப்பட்டது.
குறிப்பாக உயர்கல்வி வளர்ச்சிக்கும், அனைவரையும் உள்ளடக்கும் சமத்துவக் கல்வியை முன்னெடுத்ததற்குமான அவரது அளப்பரிய பங்களிப்பே இந்த விருதுக்கான அடிப்படை காரணமாகும்.
இலங்கையில் பிறந்து கல்வி கற்ற பேராசிரியர் நிஷான் கனகராஜா, பின்னர் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்து, உலகப் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1989ஆம் ஆண்டு பட்டப்படிப்பையும், 1993ஆம் ஆண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
யாழ்ப்பாணத்தில் பிறந்த பேராசிரியர் நிஷான், யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன் 1985ம் ஆண்டு கல்லூரியின் தலைமை மாணவத் தலைவராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விருதைப் பெறுவது எனக்கு மிகுந்த பெருமையும் பணிவும் அளிக்கிறது. இது என்னுடைய வெற்றி மட்டுமல்ல; எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் என்னுடன் பணியாற்றிய அனைவரின் அர்ப்பணிப்பிற்கான அங்கீகாரமாகவும் பார்க்கிறேன் என இந்த அங்கீகாரம் பற்றி சேர் நிஷான் கருத்து வெளியிட்டுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் ஒரு சிறுவனாக இருந்த நான், இன்று பிரித்தானிய அரசரால் கௌரவிக்கப்படுவது கல்வியின் மாற்றாற்றலுக்கான மிகச் சிறந்த சான்றாகும். இதே வாய்ப்பை மற்றவர்களும் பெறுவதற்காக தடைகளை அகற்றும் பணியை தொடர்ந்து முன்னெடுப்பேன் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
