ஜெர்மனியில் தங்களது இறுதிநாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் நோயாளிகளுக்குப் பராமரிப்புச் சிகிச்சை அளிக்கும் (Palliative Care) மருத்துவர் ஒருவர், 15 நோயாளிகளைக் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் தனியுரிமை விதிகளின்படி ‘ஜோஹன்னஸ் எம்.’ (Johannes M.) என்று பெயரிடப்பட்டுள்ள 41 வயதுடைய இந்த மருத்துவரை பெர்லின் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்து இந்தத் தண்டனையை வழங்கியுள்ளது.
கடந்த 2021 செப்டம்பர் முதல் 2024 ஜூலை வரையிலான காலப்பகுதியில், 12 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 15 பேரை இந்த மருத்துவர் கொலை செய்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் 25 முதல் 94 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், உடனடியாக மரணிக்கும் நிலையில் இருக்கவில்லை என நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்ற இந்த மருத்துவர், அவர்களின் அனுமதி இல்லாமலேயே ஆபத்தான பல மருந்து கலவைகளை ஊசி மூலம் ஏற்றி அவர்களைக் கொலை செய்துள்ளார். மேலும், தனது குற்றங்களை மறைப்பதற்காகப் பலமுறை அவர்களின் வீடுகளுக்குத் தீ வைக்கவும் அவர் முயன்றுள்ளார்.
கடந்த 2024 ஜூலை மாதம் அவர் கைது செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக, ஒரே நாளில் இரண்டு நோயாளிகளைக் கொலை செய்துள்ளார்.
மத்திய பெர்லினில் உள்ள அவரது வீட்டில் 75 வயது முதியவர் ஒருவரையும், சில மணிநேரங்களுக்குப் பிறகு அண்டை மாவட்டத்தில் உள்ள 76 வயது மூதாட்டி ஒருவரையும் அவர் கொன்றுள்ளார். பின்னர் அந்தப் பெண்ணின் வீட்டிற்குத் தீ வைக்க முயன்று, அது தோல்வியில் முடிவடைந்துள்ளது.
சுமார் ஒரு வருட காலமாக நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின்போது இந்த மருத்துவர் மௌனம் காத்து வந்தார். எனினும், கடந்த மாதம் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருந்த எனது நோயாளிகளை நான் கொன்றது உண்மைதான். அவர்களின் துன்பங்களையும் பலவீனங்களையும் போக்குவதற்காக நான் சரியான காரியத்தையே செய்கிறேன் என்று என்னை நானே நம்பவைத்துக் கொண்டேன். இது அனைவருக்கும் நல்லது என்றுதான் நான் நினைத்தேன். இதனால் ஏற்பட்ட அனைத்துத் துன்பங்களுக்கும் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என மருத்துவர் ஜோஹன்னஸ் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பின்போது நீதிமன்றத்தில் இருந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களால் இன்னும் இந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.
2021இல் உயிரிழந்த 25 வயதான இளம் பெண்ணின் தாய், “என் மகள் ஒருபோதும் தான் வாழ விரும்பவில்லை என்று கூறியதே இல்லை” என அழுதுகொண்டே கூறினார்.
அதேபோல், 2024இல் உயிரிழந்த 72 வயது மூதாட்டியின் மகன், “எனது தாயார் தனது சகோதரியுடன் பால்டிக் கடலுக்குச் சுற்றுலா செல்லத் திட்டமிட்டிருந்தார். அவர் தொடர்ந்து வாழவே விரும்பினார்” என்று தெரிவித்தார்.
இந்த மருத்துவர் மேலும் பல நோயாளிகளைக் கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் தற்போது மேலும் 76 சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தக் குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால், ஜெர்மனியின் வரலாற்றிலேயே மிக மோசமான தொடர் கொலைகளில் ஒன்றாக இது பதிவாகும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது விதிக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனைக் காலத்திற்குப் பிறகும், இந்த மருத்துவர் சமூகத்திற்கு ஆபத்தானவர் என்பதால் அவரைத் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், அவர் இனி ஒருபோதும் மருத்துவத் தொழில் செய்ய முடியாதவாறு ஆயுட்காலத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
