HomeFeatured Newsமுன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது!

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது!

முன்னாள் கடற்படைத் தளபதியும், பிளீட் அட்மிரலுமான (Admiral of the Fleet) வசந்த கரன்னாகொட, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (ஜூலை 3, 2026) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

2006ஆம் ஆண்டு யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் இணைத்துக் கொண்டமை தொடர்பாக நிலவி வரும் விசாரணை ஒன்றின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கைது குறித்து லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வரும் காரணங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன:

கடற்படையின் ‘கெடட் எக்ஸிகியூடிவ் அதிகாரி’ பதவிக்குரிய எவ்வித அடிப்படைத் தகைமைகளும் இல்லாத நிலையிலும், தகைமைகளை மாற்றியமைத்து யோஷித ராஜபக்ஷவை கடற்படையில் இணைத்துக் கொள்வதற்கு வசந்த கரன்னாகொட உதவினார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கடற்படையின் முறையான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மீறி, யோஷித ராஜபக்ஷவை பிரித்தானியாவின் றோயல் கடற்படை அகாடமிக்கு அரச செலவில் பயிற்சிக்கு அனுப்பியதன் மூலம் லஞ்ச ஊழல் மற்றும் முறைகேடு செய்ததாக ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக கடந்த ஜூன் 16 மற்றும் 22 ஆகிய திகதிகளில் வாக்குமூலம் அளிப்பதற்காக ஆணைக்குழுவினால் வசந்த கரன்னாகொடவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் முன்னிலையாகியிருக்கவில்லை. இந்த நிலையில், இன்று காலை 10.05 மணியளவில் லஞ்ச ஊழல் ஆணைக்குழு வளாகத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதி, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ கடந்த ஜூன் 17ஆம் திகதி கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular