HomeFeatured Newsஎரிபொருள் இறக்குமதி செலவினம் 112% அதிகரிப்பு; வாகன இறக்குமதியும் உயர்வு

எரிபொருள் இறக்குமதி செலவினம் 112% அதிகரிப்பு; வாகன இறக்குமதியும் உயர்வு

உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் உள்நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட அளவு அதிகரித்தமை காரணமாக, கடந்த 2026 மே மாதத்தில் இலங்கையின் எரிபொருள் இறக்குமதி செலவினம் கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 112 சதவீதம் (ஆண்டுக்கு ஆண்டு) அதிகரித்து 536 மில்லியன் அமெரிக்க டாலர்களாகப் பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2026 மே மாதத்திற்கான வெளிநாட்டுத் துறை செயல்திறன் அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

எனினும், முந்தைய மாதத்துடன் (மாதாந்த அடிப்படையில்) ஒப்பிடுகையில் மே மாதத்தில் எரிபொருள் இறக்குமதி செலவினம் 39.5 சதவீதம் குறைந்துள்ளது.

மத்திய வங்கியின் அறிக்கையிலுள்ள முக்கிய விபரங்கள் வருமாறு:

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இலங்கை தொடர்ந்து பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. இதன் காரணமாக, நடப்புக் கணக்கு மே மாதத்தில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக பற்றாக்குறையைப் பதிவு செய்துள்ளது.

மே மாதத்தில் வெளிநாட்டு நடப்புக் கணக்கு 194 மில்லியன் அமெரிக்க டாலர் பற்றாக்குறையைப் பதிவு செய்துள்ளது.

அதிகரித்த வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் சேவைகள் கணக்கின் உபரி குறைந்தமை ஆகியவையே இதற்குக் காரணமாகும். இதன் விளைவாக, ஜனவரி முதல் மே வரையான காலப்பகுதியில் ஒட்டுமொத்த நடப்புக் கணக்கு பற்றாக்குறை 97 மில்லியன் டாலர்களாக உள்ளது.

ஏற்றுமதி வருமானத்தை விட இறக்குமதி செலவினம் வேகமாக அதிகரித்ததால் வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்துள்ளது.

அதன்படி, 2026 ஜனவரிமே காலப்பகுதியில் ஒட்டுமொத்த வர்த்தகப் பற்றாக்குறை 4.7 பில்லியன் டாலர்களாக விரிவடைந்துள்ளது. இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 2.7 பில்லியன் டாலர்களாகக் காணப்பட்டது.

தனிநபர் மற்றும் வணிக வாகனங்கள் உட்பட மோட்டார் வாகன இறக்குமதி செலவினம் மே மாதத்தில் (முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில்) 20.0 சதவீதம் அதிகரித்து 250 மில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.

இதன் மூலம் ஜனவரிமே வரையான காலப்பகுதியில் வாகன இறக்குமதிக்கான ஒட்டுமொத்த செலவு 1,071 மில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

ஏற்றுமதி விலைகளின் உயர்வை விட இறக்குமதி விலைகளின் உயர்வு அதிகமாகக் காணப்பட்டதால், வர்த்தக வீதம் (Terms of Trade) வீழ்ச்சியடைந்துள்ளது.

மே மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஆண்டுக்கு ஆண்டு 9.6 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதுடன், வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1 மில்லியனைக் கடந்துள்ளது. எனினும், மே மாத சுற்றுலா வருவாய் 5.1 சதவீத வீழ்ச்சியுடன் 156 மில்லியன் டாலர்களாகக் குறைந்துள்ளது. ஜனவரிமே காலப்பகுதியில் ஒட்டுமொத்த சுற்றுலா வருவாய் 11.9 சதவீதம் குறைந்து 1,360 மில்லியன் டாலர்களாகப் பதிவாகியுள்ளது.

வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் மே மாதத்தில் 847 மில்லியன் டாலர்களாகப் பதிவாகி சாதகமான போக்கைத் தொடர்கிறது. ஜனவரிமே காலப்பகுதியில் ஒட்டுமொத்த வருவாய் 26.0 சதவீதம் அதிகரித்து 3.9 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

மே மாதத்தில் அரசாங்கப் பிணையங்கள் சந்தையிலிருந்து 60 மில்லியன் டாலர்களும், கொழும்பு பங்குச் சந்தையிலிருந்து (CSE) 23 மில்லியன் டாலர்களும் வெளிநாட்டு முதலீடுகளாக வெளியேறியுள்ளன (Net Outflow).

சீன மக்கள் வங்கியின் (PBOC) நாணயப் பரிமாற்ற வசதி (Swap Facility) உட்பட, மே மாத இறுதியில் இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு (Gross Official Reserves) 6.9 பில்லியன் டாலர்களாகக் காணப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீடிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் ஆறாவது மற்றும் ஏழாவது தவணைகள் கிடைக்கப் பெற்றமை இதற்குப் பக்கபலமாக இருந்தது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக வெளிநாட்டுத் துறையில் ஏற்பட்டுள்ள அழுத்தங்களை பிரதிபலிக்கும் வகையில், 2026 ஜூன் மாத இறுதியளவில் இலங்கை ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 7.9 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது (Depreciated). ஒத்த பொருளாதாரங்களைக் கொண்ட ஏனைய நாடுகளின் நாணய மதிப்புகளிலும் இத்தகைய வீழ்ச்சிப் போக்கு அவதானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular