வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திலிருந்து ஆறு நாட்களுக்குப் பிறகு, மூன்று வயது சிறுவன் ஒருவன் கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக ஜோர்டான் நாட்டு மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் இடைக்கால ஜனாதிபதியினால் ‘கிளீபர் மொரான்‘ (Klieber Morán) என அடையாளம் காணப்பட்ட அந்தச் சிறுவன், லா குவைரா (La Guaira) மாநிலத்தில் உள்ள கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்படும் போது, மீட்புப் படையினர் மகிழ்ச்சியாரவாரம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்த மீட்புச் சம்பவமானது ஒரு “நம்பிக்கையின் தருணம்” என டெல்சி ரோட்ரிக்ஸ் விவரித்துள்ளார்.
நிலநடுக்கம் ஏற்பட்டு முதல் மூன்று நாட்களுக்குள் (72 மணித்தியாலங்கள்) இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்கள் உயிருடன் மீட்கப்படுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் கூறும் நிலையில், 6 நாட்களுக்குப் பின் இச்சிறுவன் மீட்கப்பட்டுள்ளது ஒரு அதிசயமாகப் பார்க்கப்படுகிறது.
முதலுதவி சிகிச்சையின் பின் தலைநகர் காரகாஸில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அச்சிறுவனின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வெனிசுலாவில் ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் பலியானோரின் எண்ணிக்கை 1,943 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 10,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதுடன், பல்லாயிரக்கணக்கானோரைக் காணவில்லை என அஞ்சப்படுகிறது.
நாசாவின் (NASA) செயற்கைக்கோள் தரவுகளின் ஆரம்பக் கட்ட மதிப்பீட்டின்படி, நிலநடுக்க அதிர்வுகளால் சுமார் 58,870 கட்டிடங்கள் சேதமடைந்திருக்கலாம் அல்லது முற்றாக அழிந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட லா குவைரா பகுதியில் உணவுத் தட்டுப்பாடு நிலவுவதாகவும், அடிப்படைச் சேவைகள் மற்றும் தகவல் தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமை (UNHCR) தெரிவித்துள்ளது.
உதவிப் பொருட்கள் கிடைப்பதில் உள்ள தாமதம் காரணமாக மக்களிடையே பதற்றம் அதிகரித்து வருவதாக அது குறிப்பிட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் (WHO) விடுத்துள்ள எச்சரிக்கையில், சுகாதாரச் சேவைகள் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும், தடுப்பூசி போடுதல் குறைவாக உள்ளதால் தட்டம்மை மற்றும் தொண்டை அழற்சி (Diphtheria) போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மேயர் தெரிவித்துள்ளார்.
இடிபாடுகளுக்குள் இன்னும் மனிதர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால், உள்நாட்டு மற்றும் சர்வதேச மீட்புக் குழுவினர் மோப்ப நாய்கள் மற்றும் அதிநவீன உபகரணங்களுடன் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட பல நாடுகளின் மீட்புக் குழுவினர் இதில் களமிறங்கியுள்ளனர்.
ஐ.நா சபையின் 47 தொன் எடையுள்ள அவசர மருத்துவப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் நேற்று வெனிசுலாவை வந்தடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட 30,000 மக்களுக்கு அடுத்த 6 மாத காலத்திற்குத் தற்காலிக தங்குமிடம் மற்றும் நிவாரணம் வழங்க முதற்கட்டமாக 15 மில்லியன் டாலர் நிதி தேவைப்படுவதாக UNHCR கோரிக்கை விடுத்துள்ளது.
