HomeTop Newsசுவிஸிற்குள் நுழைய பயணிகள் மணித்தியாலக் கணக்கில் காத்திருக்கும் அவலம்!

சுவிஸிற்குள் நுழைய பயணிகள் மணித்தியாலக் கணக்கில் காத்திருக்கும் அவலம்!

அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் (UK) இருந்து சுவிட்சர்லாந்திற்கு விமானம் மூலம் வரும் பயணிகள், நாட்டிற்குள் நுழைவதற்குச் சில சமயங்களில் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு நடைமுறையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷெங்கன் (Schengen) வலயத்திற்குள் நுழைபவர்கள் மற்றும் வெளியேறுபவர்களைப் பதிவு செய்வதற்காக ‘Entry/Exit System’ (EES) என்ற புதிய முறை கொண்டுவரப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டைன் அல்லது சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டு (Passport) இல்லாத அனைத்துப் பயணிகளும் இந்த புதிய முறையின் கீழ் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

மாதக்கணக்கில் படிப்படியாக அமுல்படுத்தப்பட்ட இந்த EES முறை, கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் ஷெங்கன் வலயம் முழுவதும் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன் மூலம் இதுவரை 90 மில்லியன் மக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்நாட்டலுவல்கள் மற்றும் குடியேற்றத்திற்கான ஆணையர் மேக்னஸ் ப்ரன்னர் தெரிவித்துள்ளார்.

வாரத்திற்குச் சுமார் இரண்டு மில்லியன் பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக 1,000 பேர் உட்பட மொத்தம் 38,000 பேருக்கு நுழைவு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் அண்டை நாடுகள் அனைத்தும் ஷெங்கன் வலயத்திற்குள் இருப்பதால், சுவிட்சர்லாந்தில் உள்ள விமான நிலையங்களில் ஷெங்கன் அல்லாத வெளிநாடுகளில் இருந்து வரும் விமானப் பயணிகளுக்கு மட்டுமே இச்சோதனை நடத்தப்படுகிறது.

இம்முறை ஜெனீவா விமான நிலையத்தில கடந்த 2025 அக்டோபரிலும், சூரிச் விமான நிலையத்தில் 2025 நவம்பரிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஷெங்கன் வலயத்திற்குள் செல்லுபடியாகும் வதிவிட அனுமதிப் பத்திரம் (Residence Permit) இல்லாத மூன்றாம் நாட்டுப் பிரஜைகள் முதல்முறையாக உள்ளே நுழையும் போது, அவர்களின் தனிப்பட்ட விபரங்கள், பயண ஆவணங்கள் மற்றும் பயோமெட்ரிக் (Biometric) தரவுகள் சேகரிக்கப்பட்டு புதிய கோப்பு உருவாக்கப்படுகிறது.

இந்தத் தரவு சேகரிப்பு முறைக்கு அதிக நேரம் எடுப்பதால், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுகிறது என சூரிச் விமான நிலைய ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பயணிகள் வழமையாக 1 முதல் 2 மணித்தியாலங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளதாகவும், குறிப்பாக ஷெங்கன் அல்லாத நாடுகளிலிருந்து ஒரே நேரத்தில் பல விமானங்கள் வந்து இறங்கும்போது இந்தத் தாமதம் ஏற்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பனிச்சறுக்கு (Ski) விடுமுறைக்காலம் காரணமாக ஜெனீவா விமான நிலையத்தில் பயணிகளின் வருகை மிக அதிகமாகக் காணப்பட்டது.

மிகவும் மோசமான ஒரு நாளில், பயணிகள் எல்லையைக் கடக்க இரண்டரை மணித்தியாலங்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்ததுஎன்று ஜெனீவா விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்தகைய நாட்களில் 70,000 க்கும் அதிகமான பயணிகள் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

எவ்வாறாயினும், இந்த புதிய EES முறை ஒட்டுமொத்தமாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், தற்போதைய தாமதங்களைத் தவிர்க்கும் பொருட்டு சோதனைகளை விரைவுபடுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் சுவிஸ் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு மத்திய அலுவலகம் (BAZG) தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular