நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பெரும் பதற்றநிலை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சிறைச்சாலை வளாகத்தைப் பரிசோதிக்கவும், வன்முறைகளுடன் தொடர்புடைய நபர்களிடம் வாக்குமூலங்களைப் பெறவும் மூன்று விசேட விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டு களமிறக்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலையில் ஏற்பட்ட ஆரம்பக்கட்ட வன்முறைகள் ‘கட்டுவெல்லகொட சுரேஷ்‘ என்ற கைதியால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிறைச்சாலையினுள் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் வியாபாரம் குறித்து, சிறைச்சாலை அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியதாகக் கூறப்படும் இரண்டு கைதிகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டு அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
சிறைச்சாலையின் ‘SM’ பிரிவினுள்ளேயே இந்த முதலாவது மோதல் வெடித்ததாக அதிகாரிகள் நம்புகின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, வன்முறைக்குக் காரணமான கைதி சுரேஷ் பலத்த பாதுகாப்புடன் ‘பூஸ்ஸ‘ அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலை வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், இரண்டாம் நாள் ஏற்பட்ட வன்முறைகளுக்கும் முதல் நாள் நடந்த சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என புலனாய்வாளர்கள் கருதுகின்றனர்.
சிறைச்சாலையில் கைதிகளுக்கு உணவு விநியோகிக்கப்பட்ட போது, சிறைச்சாலை அதிகாரி ஒருவருக்கும் கைதி ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதமே இந்த இரண்டாவது கலவரத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.
சிறைச்சாலையில் நிலவி வரும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான கைதிகளுக்கு அது கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சல் ஆகிய காரணங்களால் சிறையினுள் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வந்தது. இந்த நிலையில் ஏற்பட்ட வாக்குவாதம், கைதிகள் மத்தியில் ஒரு பெரிய கலவரமாக வெடித்தது.
கலவரத்தின் போது கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளைத் தாக்கி முட்டி மோதியுள்ளனர். நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அதிகாரிகள் வானத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்தது.
இந்தக் குழப்பமான சூழ்நிலையைப் பயன்படுத்தி சிறைச்சாலையின் சில துப்பாக்கிகள் காணாமல் போயிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
எனினும், அதிகாரிகள் இரவு முழுவதும் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையின் பின்னர் அந்தத் துப்பாக்கிகள் அனைத்தும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன. தற்போது சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் சிஐடியினர் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
