மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து குவைத் நாடு தனது வான்வெளியை அவசரமாக மூடியுள்ளது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் குவைத் சிவில் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் (DGCA) தெரிவித்துள்ளது.
குவைத் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (ஜூன் 11, 2026) அதிகாலை 4:50 மணி முதல் வான்வெளி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
குவைத் வான் எல்லைக்குள் ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஊடுருவியதை அடுத்து, குவைத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air Defence Systems) அவற்றை இடைமறித்துத் தாக்கி அழித்தன.
இதன் காரணமாக வான்வெளியில் ஏற்பட்ட வெடிப்புச் சத்தங்களைத் தொடர்ந்து, சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வான்வெளி உடனடியாக மூடப்பட்டது.
குவைத் நாடு ஈரானின் பாவித்தனமான ஆக்கிரமிப்புத் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இப்பிராந்தியத்தில் உள்ள சிவில் விமானப் போக்குவரத்துக்கான சாத்தியமான அபாயங்களைக் கணக்கில் கொண்டே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
வான்வெளி மூடப்பட்டதால் குவைத் நோக்கி வந்த பல சர்வதேச விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்கு அவசரமாகத் திருப்பிவிடப்பட்டன. சில விமானங்கள் குவைத் வான் எல்லைக்கு வெளியேயே நீண்ட நேரம் வட்டமடித்துப் பறந்தன. நாட்டின் பாதுகாப்புச் சூழல் சீரடைந்து, அச்சுறுத்தல்கள் முழுமையாக நீக்கப்பட்ட பின்னர் வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டு, வழக்கமான விமானச் சேவைகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில், அமெரிக்க ராணுவம் ஈரானில் உள்ள பல இலக்குகள் மீது புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருந்தது. இதற்குப் பதிலடியாக, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாகவே, அமெரிக்க ராணுவ தளங்களைக் கொண்டுள்ள குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியுள்ளது. அண்மையில் குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் நடத்திய நேரடித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததும், பலர் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போதைய வான்வெளி மூடல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானப் போக்குவரத்து பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.
