மத்திய கிழக்கில் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க படையினருக்கு, செல்போனில் பதிவு செய்யப்படும் வீடியோக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகள் மூலம் ஈரான், அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைக்க உதவியாக தகவல்களைப் பெறுகிறது என அமெரிக்காவின் மத்திய கிழக்கு பிராந்திய உயர்மட்ட தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் வெளியிடப்பட்ட உள்துறை கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படையினரின் செல்போன்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் செய்தியாளர்கள் வெளியிடும் தகவல்கள் ஆகியவை ஈரானுக்கு தாக்குதல்களின் வெற்றி அல்லது தோல்வியை உடனுக்குடன் மதிப்பிட உதவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திறந்த தகவல்கள் அமெரிக்க படையினரின் உயிருக்கும், வளைகுடா நாடுகளில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் நேரடி அச்சுறுத்தலாக மாறக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
ஜோர்டானில் பணியில் உள்ள சில அமெரிக்க படையினரிடம் விரைவில் அவர்களின் செல்போன்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்படலாம். இதுகுறித்து பிராந்திய அளவில் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளை பேச்சாளர் கேப்டன் டிமோதி ஹாக்கின்ஸ், இது செயல்பாட்டு பாதுகாப்பின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் பொதுவான அறிவுறுத்தலாகும் என தெரிவித்துள்ளார்.
ஜூலை 17 அன்று ஜோர்டானில் உள்ள முவஃபாக் சால்டி விமானத் தளம் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியபோது, அமெரிக்க வீரர் ஒருவர் ஸ்மார்ட் கிளாஸ் மூலம் பதிவு செய்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டது.
அந்த வீடியோவில், தாக்குதலின் போது வீரர்கள் எந்த இடத்தில் உள்ளனர் என்பது தெளிவாகக் காணப்பட்டதாகவும், இதுபோன்ற பதிவுகள் எதிரி நாடுகளுக்கு முக்கியமான ராணுவத் தகவல்களை வழங்கக்கூடும் என்றும் அட்மிரல் கூப்பர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ராணுவம் மின்னணு குறுக்கீட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால், தாக்குதல்களின் விளைவுகளை ஈரான் நேரடியாக அறிய முடியாது. ஆனால் செய்தி அறிக்கைகள், சமூக ஊடக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மூலம் எந்த இலக்குகள் தாக்கப்பட்டன, எவ்வளவு சேதம் ஏற்பட்டது போன்ற தகவல்களை ஈரான் இலவசமாகப் பெற்றுக்கொள்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெப்ரவரி 28 முதல் நடைபெற்று வரும் அமெரிக்கா–ஈரான் மோதலில் இதுவரை 18 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், 600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
