இடைக்கால அமைதி ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் ஈரானிய அதிகாரிகளை முதன்முறையாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த அதே வேளையில், ஈரானுடன் மீண்டும் போரைத் தொடங்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை எச்சரித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் (Buergenstock) ரிசார்ட்டில் கத்தார் நாட்டின் மத்தியஸ்தத்துடன் இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையிலான இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையே கடந்த வாரம் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும், லெபனான் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் போரை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
இருப்பினும், லெபனானில் போரை நிறுத்த அமெரிக்கா தவறிவிட்டதாகக் கூறி, ஈரான் மீண்டும் ஹார்முஸ் நீரிணையை மூடியுள்ளது.
இதனால் கோபமடைந்த அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் கடுமையாக பதிவிட்டுள்ளார்.
“லெபனானில் இருக்கும் தங்களின் வாடகைப்படையான ஹிஸ்புல்லாக்கள் பிரச்சினைகளை உண்டாக்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும். அவர்கள் நிறுத்தவில்லை என்றால், கடந்த வாரம் நாங்கள் ஈரானைத் தாக்கியதை விடவும் மிகக் கொடூரமாக மீண்டும் தாக்குவோம்!” என எச்சரித்துள்ளார்.
ஈரான் அந்த நீர் வழியை மூடினால், அவர்களுக்கு என்று ஒரு நாடே இல்லாமல் போய்விடும்” என்று மிரட்டல் விடுத்ததுடன், அந்த நீர் வழியை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுக்கும் என்றும் அச்சுறுத்தியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, லெபனானில் நடக்கும் வன்முறைகள் தற்காலிகமானவை என்றும், அங்கு அமைதியை நிலைநாட்ட முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் தெரிவித்தார்.
டிரம்ப் ஈரானை எச்சரித்து வந்த போதிலும், வென்ஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஈரான் மக்களுடனான உறவை முற்றிலும் ஒரு புதிய தளத்திற்கு மாற்றுமாறு அதிபர் டிரம்ப் எங்களைக் கேட்டுக்கொண்டார்” எனக் குறிப்பிட்டார். இப்பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் இணைந்து புகைப்படம் எடுப்பதைத் தவிர்த்தனர்.
மாலை வேளையில், ஹார்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பது குறித்தும், லெபனான் போர் நிறுத்தம் மற்றும் அணுசக்தி ஒப்பந்தம் குறித்தும் இரு தரப்பினரும் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக அமெரிக்க தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
