HomeTop Newsவரலாற்றில் முதல்முறையாக AI மூலம் தடுப்பூசி தயாரிப்பு!

வரலாற்றில் முதல்முறையாக AI மூலம் தடுப்பூசி தயாரிப்பு!

உலகையே அச்சுறுத்தக்கூடிய பல்வேறு வகையான வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பளிக்கும் மற்றும் எதிர்காலப் பெருந்தொற்றுகளைத் தடுக்கும் ஒரு “அடிப்படையிலேயே புதிய” தடுப்பூசியை ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர்.

தடுப்பூசி ஒன்றின் மிக முக்கியப் பகுதி, முழுமையாக AI தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டு, அது மனிதர்களிடம் சோதனை செய்யப்படுவது உலகிலேயே இதுவே முதல்முறை என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

அனைத்து கொரோனா வைரஸ்களுக்கும் ஒரே மருந்து தற்போதுள்ள கோவிட் திரிபுகளுடன் சேர்த்து, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவி அடுத்த பெருந்தொற்றை உருவாக்கக்கூடிய சாத்தியமுள்ள அனைத்து வகையான கொரோனா வைரஸ்களுக்கும் எதிராகச் செயல்படும் வகையில் இந்த தடுப்பூசி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே இருந்தாலும், இக்குழுவினர் இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காய்ச்சல் மற்றும் எபோலா வைரஸ்களைத் தடுப்பதற்கான தனித்தனி தடுப்பூசிகளையும் உருவாக்கி வருகின்றனர்.

பொதுவாக, வைரஸ்கள் தங்களின் வடிவத்தை மாற்றிக்கொண்டே இருக்கும் என்பதால், தற்போதுள்ள தடுப்பூசிகள் விரைவில் காலாவதியாகிவிடுகின்றன.

இதனால்தான் ஒவ்வொரு குளிர்காலத்திலும் புதிய தடுப்பூசிகளைப் போட வேண்டியுள்ளது. “நாம் எப்போதும் வைரஸ்களுக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்தத் தொழில்நுட்பம் மூலம் நாம் வைரஸ்களை விட ஒரு படி முந்திச் செல்ல முயல்கிறோம்” என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜொனாதன் ஹீனி தெரிவித்துள்ளார்.

வழக்கமாக, தற்போது பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு குறிப்பிட்ட வைரஸ் வகையை வைத்தே தடுப்பூசிகள் தயாரிக்கப்படும். ஆனால், கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கொரோனா வைரஸ்களின் மரபணு குறியீடுகளை சேகரித்து, அவற்றை செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் பகுப்பாய்வு செய்தனர்.

இதன் மூலம், அந்த வைரஸ் குடும்பத்தையே முழுமையாக எதிர்க்கக்கூடிய ஒரு “சூப்பர்-ஆண்டிஜென்” அமைப்பை AI வடிவமைத்துள்ளது.

இதன் விளைவாக, வைரஸ்கள் உருமாறினாலும் அல்லது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் புதிய வைரஸ் பரவினாலும், இந்த தடுப்பூசி நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு அதனை எப்படி அழிக்க வேண்டும் என்று முன்கூட்டியே கற்றுக்கொடுத்துவிடும்.

“இது இன்றைய வைரஸ்களிலிருந்து மட்டுமின்றி, எதிர்காலத்தில் பெருந்தொற்றை ஏற்படுத்தக்கூடிய ஆபத்துகளிலிருந்தும் நம்மைக் காக்கும். பெருந்தொற்றுகளுக்கு நாம் தயாராகும் முறையில் இது ஒரு மிகப்பெரிய புரட்சிகரமான மாற்றம்” என்று பேராசிரியர் ஹீனி தெரிவித்துள்ளார்.

மனிதர்களிடம் சோதனை இந்த தடுப்பூசி பாதுகாப்பானதுதானா என்பதைச் சோதிக்க 39 நபர்களிடம் முதற்கட்ட சோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் ‘ஜர்னல் ஆஃப் இன்ஃபெக்ஷன்’ (Journal of Infection) இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இது ஏற்படுத்திய தாக்கம் மிதமானதாக இருந்தாலும், இந்தத் தொழில்நுட்பம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, 200 பேரை உள்ளடக்கிய இரண்டாவது கட்ட சோதனை தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular